கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் தனது 40-ஆவது திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனிலும் தொடர்ந்து மதுரையிலும் நடைபெற்றுவந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து தனுஷ் வித்தியாசமான கெட்-அப்பில் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த சூழலில் படத்திற்கு ‘சுருளி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனை மறுத்த தயாரிப்பு நிறுவனம், ‘தனுஷ் நடித்து வரும் 40-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெற இருப்பதாகவும், பிப்ரவரி மாதம் படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் வெளியிடப்படும். சுருளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது வெறும் வதந்தி தான்’ என்றும் அறிவித்தனர்.
அறிவிக்கப்பட்டது போன்றே படத்தின் படப்பிடிப்பு மற்றும் டைட்டில் அப்டேட் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் 10 வருட நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டிருந்த போஸ்டரில் கையில் அருவாளுடன் தனுஷ் திரும்பி நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
We are preping for the last 3 days of shoot starting on the 6th. We will announce the date of the #firstlook upon completion, which is on the 9th!#10YearsOfYNOT@dhanushkraja @sash041075 @karthiksubbaraj @Music_Santhosh @chakdyn @RelianceEnt @onlynikil
— Y Not Studios (@StudiosYNot) February 1, 2020
இந்நிலையில், தயாரிப்பாளர் சசிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “வரும் 6-ஆம் தேதியிலிருந்து கடைசி மூன்று நாள் ஷூட்டிங்கிற்கான பணிகள் தொடங்குவதால், அதற்கான வேலைகளில் இருக்கிறோம். அதனால் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 9-ஆம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் தனுஷின் கதாபாத்திரம் எவ்வாறு அமையும் என்னும் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.
�,”