சொல்லி அடிச்சிருக்கார் சிவா: அண்ணாத்த குறித்து ரஜினி

Published On:

| By Balaji

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைய இருக்கும் நிலையில் அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஹூட் செயலியில் நேற்று பேசி உள்ளார். அதில், பேட்ட, விஸ்வாசம்’ படம் ஒரே நேரத்தில் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. எனக்கு விஸ்வாசம் படத்தை பார்க்க ஆவலானது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனிடம் ஏற்பாடு செய்யுமாறு கூறி படத்தை பார்த்தேன், இடைவேளை முடியும் போது படத்தில் அப்படி என்ன இருக்கிறது என யோசித்தேன்.

ஆனால் அதன் பின் படம் போகப்போக, படத்தின் நிறமே மாறிவிட்டது. க்ளைமாக்ஸ் பிரமாதம், என்னை அறியாமல் கைதட்டி விட்டேன்.

அதன் பின், இயக்குனர் சிவாவை சந்திக்க வேண்டும் என எண்ணினேன். என் வீட்டுக்கே அவர் வந்தார். வாழ்த்தினேன். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. குழந்தை மாதிரி இருந்தார். அவரிடம், ‛எனக்காக கதை இருக்கா?’ என கேட்டேன். ‛ஹிட் தர வேண்டும்’ என்றேன். அது சுலபம் என்றார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கதைக்கு 15 நாள் அவகாசம் கேட்டார். 12 நாளில் வந்து கதை சொன்னார். கதையை சொல்ல சொல்ல கிளைமாக்ஸில் என்னையும் அறியாமல் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. அப்படியே படமாக்குங்கள் என்றேன். அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று சிவா சொல்லி அடித்துள்ளார். அண்ணாத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிவாவுக்கு நன்றி. அண்ணாத்த என் வாழ்வில் மறக்க முடியாத முடியாத படம்” என்றார்.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share