நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தையொட்டி ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ மற்றும் விஷால் ஆர்யா ஆகியோர் நடித்துள்ள ’எனிமி’ ஆகிய படங்கள் மட்டும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழில் தயாராகியுள்ள ஆப்பரேஷன் ஜுஜுபி என்கிற சிறு பட்ஜெட் படமும் அதிரடி வெடிகளுக்கு மத்தியில் ஊசிப் பட்டாசாக நாங்களும் வருகிறோம் என அறிவித்திருக்கிறார்கள்.
சிலம்பரசன் நடித்துள்ள ‘மாநாடு’ படத்திற்கு திரையரங்குகள் அதிகளவில் கிடைக்காது என்பதால் அதன் வெளியீடு தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்றைய தினம் நண்பகல் அறிவித்தார். அதன் பின்னர், அண்ணாத்த படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் முகவர்களிடம் ஆதிக்க மனோநிலை உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சி தொழில் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையிலும்தான் ஜாம்பவான் என்பதை சன் பிக்சர்ஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அதிகார மையத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழ் சினிமாவில்
சன் தொலைக்காட்சி, சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் குறைந்தது இல்லை.
படங்களை தயாரிப்பதுடன் தனது பணியை முடித்துக்கொள்ளும் சன் பிக்சர்ஸ் வெளியீடு, வியாபாரம், திரையரங்க ஒப்பந்தங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. அதற்கான சில கங்காணிகளை தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தில் இருந்தே உருவாக்கி வைத்திருக்கிறது சன்பிக்சர்ஸ்.
முதலீடு – லாபம் இவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்ற பழிபாவங்களுக்கு கங்காணிகளை காரணமாக்கி விட்டு தப்பித்துக்கொள்ளும்.
இந்த முறை அண்ணாத்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும், உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்திற்கு முகவர்களும், பல இடங்களில் அலுவலகங்களும் உள்ளது ரெட் ஜெயண்ட் அதிகாரத்தில் இல்லாதபோதே திரையரங்குகளை ஆட்டிப்படைத்த நிறுவனம் ஆட்சிக்கு வந்தால் என்னாகும் சினிமா என்கிற புலம்பல்கள் அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் கேட்கும் அதன் உக்கிரத்தை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கருதப்படும் ரஜினிகாந்த் நடித்துள்ளஅண்ணாத்த” படத்தின் மூலம் திரையரங்கு உரிமையாளர்கள் அனுபவிக்க போவதாக கூறுகின்றனர்.
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் என்றாலும் அதிகார மையமாக செயல்படுவது அந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி என்பது சினிமாவட்டாரத்திற்கு தெரிந்த விஷயம். டிசம்பர் இறுதிக்குள் தன் சம்பந்தபட்ட சினிமா படப்பிடிப்புகளை முடித்து கொண்டு, ஜனவரியில் தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ளார் உதயநிதி ஸ்டாலின் என்கின்றனர்.
இதனால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் செண்பகமூர்த்தியின் ருத்ரதாண்டவம் அண்ணாத்தே படத்தின் மூலம் வெளிப்பட தொடங்கியுள்ளது என்கின்றனர் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்.
அண்ணாத்த படத்திற்கு நேரடியாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலையை ரெட் ஜெயண்ட் தொடங்கிவிட்டது. இதனால் தமிழ் சினிமாவில் தீர்மானிக்கும் சக்திகளாக இதுவரை இருந்து வரும் மதுரை அன்புசெழியன், வேலூர் சீனிவாசன், கோவை ராஜமன்னார், திருப்பூர் சுப்பிரமணியன், சேலம் டி.என்.சி இளங்கோ திருச்சி பிரான்சிஸ் இவர்கள் நிர்வாகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன.
அதுமட்டுமல்ல விநியோகம், பைனான்ஸ் இவற்றிலும் இவர்களது பங்களிப்பு இன்றி 60% படத்தயாரிப்புகள் நடப்பதில்லை. அதனால் விஷால் நடித்துள்ள எனிமி படத்தை தீபாவளிக்கு களமிறக்கியுள்ளனர் என்கிறது கோடம்பாக்க வட்டாரம் .
இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்கிய திருச்சி காமதேனு பாலாஜி செண்பகமூர்த்தியின் ருத்ரதாண்டவத்திற்கு முன் தாக்கு பிடிக்க முடியாது என்பதாலும் ஒப்பந்தபடி பண விவகாரத்தில் நடந்துகொள்ளாததால் ,எனிமி படத்தின் ஏரியா வியாபாரத்தை தயாரிப்பாளர் வினோத் நேரடியாகபேசி சென்னை, செங்கல்பட்டு தவிர மற்ற விநியோகப் பகுதிகளுக்கு விநியோகஸ்தர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
படம் வெளியீட்டில் இறுதி நேரத்தில் பைனான்ஸ் பஞ்சாயத்துக்களை தவிர்க்க தயாரிப்பாளருக்கு பாதுகாப்பாக டிசம்பரில் மற்றொரு படத்தில் நடிக்கவும் விஷால் ஒப்புக்கொண்டுள்ளார் .போட்டிக்கு ஒரு படம் இத்தனை முன்னேற்பாடுகளுடன் களமிறங்கினாலும் செண்பகமூர்த்தியின் ருத்ரதாண்டவம் உக்கிரமாகவே இருக்கிறது என்கிறது தியேட்டர் வட்டாரம்.
அண்ணாத்த படத்துக்காக திரையரங்குகளிடம் வசூலில் எழுபத்தைந்து விழுக்காடு தொகையைத் தங்கள் பங்காகக் கொடுக்க வேண்டும் என்று ரெட் ஜெயண்ட் தரப்பில் கேட்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் 60% வரை கேட்பார்கள் என்று நினைத்த திரையரங்குக்காரர்கள் எழுபத்தைந்து விழுக்காடு என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 20 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடந்த திரையரங்குகள் தற்போதுதான் சற்று மூச்சு விட தொடங்கியிருக்கிறது.
இருபதுமாத இழப்பை முழுமையாக ஈடுகட்ட முடியாது என்றாலும் படிப்படியாக நட்டத்திலிருந்து மீண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையை நாசம் செய்யும் வகையில் இருக்கிறது செண்பகமூர்த்தியின் செயல்பாடு என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் .
அதனால் அண்ணாத்த படத்துக்கு மாற்றாக எனிமி படத்தைத் திரையிட்டுக் கொள்கிறோம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்களாம்.
இது குறித்துப் பெயர் கூற அஞ்சிய திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறியதாவது,
இது ரஜினிகாந்த் படம் என்பதற்காக 75% க்கு ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து அஜீத்குமார், விஜய், சூர்யா,தனுஷ், ஆகிய நடிகர்களின் படங்களை வெளியிடும் காலத்தில் இதே அளவு கேட்பார்கள் இப்போதே அதற்கு முடிவு காண வேண்டும்.
அதனால் அண்ணாத்த படத்தை 75% அடிப்படையில் திரையிட வேண்டாம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவு செய்திருப்பதாக கூறினார். இதனால் எனிமி படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் முதல்வர்களான மறைந்த மு.கருணாநிதியும், ஜெயலலிதா, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் இருந்தவரை திரையரங்கு தொழிலில் தலையிட்டதில்லை
தங்களது தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னணி நடிகர்கள் படங்களை நியாயமான விலைக்கு கொடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி தரப்பில் தயாரிப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தற்போதைய நிலை போன்று அதிகாரத்துடன் திரையரங்குகளை அணுக அவர்கள் அனுமதித்தது இல்லை. சினிமாவில் அதிகமான நாட்டமில்லாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சினைகளை களைவதில் தீவிரம் காட்டுகிறார். அதற்காக அதிகாரத்தை பயன்படுத்துகிறார். இதனை தனது வாரிசாக வளர்ந்துவரும் உதயநிதி ஸ்டாலினும் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறார்.
அதிகபட்ச வருமானத்தை மட்டும் பிரதான நோக்கமாக கொண்டு உதயநிதி ஸ்டாலின் முகமூடியை மாட்டிக்கொண்டு ருத்ரதாண்டவம் ஆடும் செண்பகமூர்த்தி போன்றவர்களை ஆரம்பத்திலேயே, நெறிப்படுத்தி, ஒழுங்குபடுத்துவது எதிர்கால முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்லது என்கின்றனர்” தமிழ்சினிமா வட்டாரத்தில்
– இராமானுஜம்
�,”