S‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக புதிய படங்கள் வெளியிட முடியாமல் போனது.

இந்த வருடம் தீபாவளிக்கு நான்கு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் சில நாட்கள் பரபரப்பு இருந்தது. விபரம் தெரிந்த விநியோகஸ்தர்கள் ஒன்று இரண்டு படம் மட்டுமே வரும் மற்ற படங்கள் எல்லாம் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ள அறிவிக்கப்பட்ட படங்களாக கடைசி நேரத்தில் காணாமல் போய்விடும் என்றார்கள். அருண் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட வா டீல் அப்படித்தான் தற்போது பட்டியலில் இல்லாமல் காணாமல் போனது.

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த, விஷால் நடித்துள்ள எனிமி என இரண்டு படங்கள் மட்டும் தீபாவளி களத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்களில் அண்ணாத்த படம் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்கிற மறைமுக அழுத்தம் தியேட்டர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. வசூல் பங்குத் தொகையில் 75% வரை தியேட்டர்கள் தயாரிப்பாளருக்கு வழங்க வேண்டும் என அண்ணாத்த படத்திற்கு தமிழகம் முழுவதும் தியேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு பேசி வரும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் விஷால் நடித்துள்ள எனிமி படத்தை திரையிட முடிவு எடுத்துள்ளதாக, ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். அதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் நேற்று வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவு.

எனிமி படத்தை நல்ல விலைக்கு வாங்கிகொள்ள ஓடிடி நிறுவனங்கள் என்னை தொடர்பு கொண்டு நெருக்கடி கொடுத்த போதும் இந்தப் படத்தை திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

தீபாவளிக்கு பெரிய நடிகரின் படம் ஒன்று வெளியாகிறது. அந்தப் படத்தை மட்டும் அனைத்து தியேட்டரிலும் திரையிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. இது உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் எனது சங்கத்திடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். எனது திரைப்படம் வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன். சினிமாவுக்கு இது ஆரோக்கியமான போக்கு இல்லை. தீபாவளி போன்ற பண்டிகைக்கு இரண்டு படம் என்பது தியேட்டருக்கு தேவை , நான்கு நாட்கள் இரண்டு படமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே படத்தின் முதலீட்டுக்கு உரிய வருவாய் கிடைத்துவிடும். ஒரு படம் என்ன தான் சூப்பர்ஸ்டார் படமாக இருந்தாலும் 900 தியேட்டர்களில் திரையிட்டு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்க முடியாது. அது எல்லாருக்கும் தெரிந்த உண்மை இரண்டாவது நாளே பல தியேட்டர்களில் 40% பார்வையாளர்கள் வருவதே சிரமம். ஒரு படத்தை மட்டும் திரையிட்டு மக்களை பார்க்க வைத்து வசூலை குவிக்க முடியாது. அப்படி வந்தால் 150 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும் இதுவரை அப்படி ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது இல்லை.

எனது சங்கம் பெடரேசனில் பேசி எனிமி படத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நான் கேட்பது, 250 திரைகள் தமிழ்நாடு முழுவதும் கலந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏனென்றால் நான் எதிர்பார்க்கும் வருவாய் என்பது மிக மிக குறைவு அது நான்கு நாட்களில் கிடைத்துவிடும்.

அவ்வாறு நடக்காத நிலையில், அதற்கு எதிராக போராடுவேன் அது யாராக இருந்தாலும் எதிர்த்து பேசுவேன். இந்த தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இதுபோன்ற ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுக்கவேண்டும். இது எனக்காக மட்டுமல்ல எல்லோருக்காகவும்தான் என கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக திரையரங்குகள் வட்டாரத்தில் பேசியபோது, எனிமி தயாரிப்பாளர் வினோத் ஆடியோ பதிவில் கூறியிருப்பது உண்மைதான். ஒரு ஊரில் எத்தனை திரையரங்கு இருக்கிறதோ அவற்றில் எல்லாம் அண்ணாத்த படத்தை போடும்படி கூறப்படுகிறது. மினிமம் கேரண்டி இல்லாமல் அட்வான்ஸ் அடிப்படையில் படத்தை திரையிட வழங்குவதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பொருளாதார நஷ்டம் வராது. ஓடிய வரை வருமானம் கிடைக்கும் என்பதால் திரையரங்குகள் அண்ணாத்த படத்தை திரையிட ஆர்வம் காட்டுகின்றனர். மறுத்தால் ஆளுங்கட்சியின் கோபத்துக்கு உள்ளாக வேண்டிவரும் என பயப்படுகின்றனர். இருந்தபோதிலும் இது சினிமாவுக்கு ஆரோக்கியமான போக்கு இல்லை. குறைந்தபட்சம் 700 தியேட்டர்களில் அண்ணாத்த படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. ஒரு தியேட்டருக்கு சராசரியாக ஒரு காட்சிக்கு 500 பார்வையாளர்கள் வந்தால் முதல் நாள் மட்டும் ஐந்து காட்சிகளில் 17,50,000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிடும். முதல் நாள்குறைந்தபட்சம் ஒரு டிக்கெட் 150 ரூபாய் முதல் அதிகபட்சம் 1000ம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். சுமார் 30 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகவேண்டும் என்கிற திட்டமிடலுடன் அண்ணாத்த படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துவரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் செயல்படுகிறது. தமிழகத்தில் ரஜினிகாந்த் படம் பார்ப்போர் எண்ணிக்கை படம் நன்றாக இருந்தால் அதிகபட்சமாக 90 லட்சம் பேர் படம் பார்ப்பார்கள் இவர்களை ஒரு வார காலத்திற்குள் தியேட்டருக்கு வர வைக்கும் முயற்சி. ஆனால் இதுநடைமுறை சாத்தியம் இல்லை.தீபாவளி பண்டிகை காலங்களில் இரண்டு மூன்று படங்களை பார்க்கும் பழக்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது. அதனை ஊக்குவிக்க வேண்டும். அதை விடுத்து ஒரே படத்தை அனைத்து திரையரங்கிலும் வெளியிட்டு குறுகிய நாட்களில் மொத்த முதலீட்டையும் வசூல் செய்ய திட்டமிடுவது தவறானது மட்டுமல்ல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். படம் சரியில்லை என்றால் இரண்டாவது நாளே திரையரங்குகள் காலியாகிவிடும். அதனால் தியேட்டர் தொழில் பாதிக்கப்படும் என்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் பேசியபோது, எனிமி தயாரிப்பாளருக்கு நடிகர் விஷால் ஆதரவு இருப்பதால் வெளிப்படையாக பேசிவிட்டார். இதுபோன்று எல்லா தயாரிப்பாளர்களும் பேசிவிட முடியாது. தமிழகத்தில் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போது எல்லாம் இதுபோன்ற நெருக்கடிகள் தொடர்கதையாக உள்ளது.

வலிமைமிக்க தொலைக்காட்சி இரண்டு, அது மட்டுமல்லாது தயாரிப்பு, நடிப்பு, விநியோகம் என எல்லா தளங்களிலும் ஆளுங்கட்சி ரத்த உறவுகள் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் இவர்களது ஆதிக்கம் அதிகரிக்கிறது. இது போன்ற நெருக்கடிகள் அதிமுக ஆட்சியில் எப்போதும் இருந்தது இல்லை. தற்போது எனிமி படத்திற்கு ஏற்பட்டது போன்ற ஒரு நெருக்கடி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2008ல் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு அப்போதைய ஆளுங்கட்சியால் ஏற்பட்டது. மதுரை விநியோக பகுதி தவிர்த்து மற்ற ஏரியாக்களில் குறைவான திரைகளில் படம் வெளியாகி வெற்றிபெற்றது. அன்றைக்கு திரையரங்க உரிமையாளர்களின் ஆதரவு சன் பிக்சர்ஸ்சுக்கு கிடைத்தது. அதனை மறந்து சன் நிறுவனம் கங்காணிகள் ஆலோசனையை கேட்டு தற்போது நடப்பது நியாயமான செயலாக படவில்லை.

ரெட் ஜெயண்ட் நிறுவன உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் விஷாலுக்கு நெருக்கமான நண்பர் தொழில், வியாபார போட்டி என்று வருகிறபோது நண்பனிடம் கூட நியாயங்கள் காணாமல் போவது ஆச்சர்யமாக இருக்கிறது என்கின்றனர்.

எனிமி படத்துக்கு எனிமியாக விஸ்வரூபம் எடுத்துள்ள அண்ணாத்தே ஆதிக்கத்தை முறியடித்து திரைக்கு வருமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

**- இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share