ரசிகர்களின் இடைவிடாத கதறலுக்குப் பிறகு, ஒருவழியாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட்லுக் ஆகியவை வெளியாகிவிட்டது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் வலிமை படம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
வலிமை படமானது 2021ல் வெளியாகும் என்பதை உறுதி செய்திருக்கிறது. அதனால், படத்தை முடிக்கும் பணிகள் மும்மரமாக நடந்துவருகிறது. படத்துக்கான படப்பிடிப்பு 95% முடிந்துவிட்ட நிலையில், பேட்ச் ஒர்க்கிற்காக ஹைதராபாத்தில் கடந்த 10 நாட்களாக படக்குழு பணியாற்றிவந்தது. இந்த ஹைதராபாத் ஷூட்டிங்கில் நான்கு நாட்களாக கலந்துகொண்ட அஜித், தற்பொழுது சென்னை திரும்பியிருக்கிறார்.
என்னவானாலும் சரி, க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு வெளிநாடு சென்றாக வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார் ஹெச்.வினோத். கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலால் இந்தியாவுக்குள்ளேயே முடித்துவிட திட்டமிட்டார்கள். ஆனால், வெளிநாட்டில் ஷூட்டிங் செல்வது உறுதியாகியிருக்கிறது.
கடந்த ஒரு வருடமாக வெளிநாடு ஷூட்டிங்கிற்காக காத்திருந்தது வலிமை டீம்.. இந்த நிலையில், விரைவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இந்த ஷூட்டிங்கில் அஜித் மற்றும் வில்லனாக நடிக்கும் டோலிவுட் நடிகர் கார்த்திகேயா கலந்துகொள்கிறார்கள். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம். 10 நாட்கள் வெளிநாடுகளில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் 7 நாட்களாவது படப்பிடிப்பு நடத்தவும் திட்டமாம்.
இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டது. அதற்கான பின்னணி இசைக் கோர்க்கும் பணிகளையும் யுவன் துவங்கிவிட்டாராம். அதோடு, படத்துக்கான CG பணிகள் கே.கே.நகரில் இருக்கும் சிட்டி ஸ்டுடியோவில் போய்க் கொண்டிருக்கிறது. ஆயுத பூஜை பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
**-தீரன்**
�,