ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவி.எம். சரவணனின் பேத்தி அபர்ணாவின் கணவர் நடிகர் ஆர்யன் ஷியாம். தற்போது இவர், ‘அந்த நாள்’ என்ற படத்தைத் தயாரித்து அதில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு ஆகியோர் நடிக்க இமான் அண்ணாச்சி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் வி.வி., இயக்கியுள்ளார்.
‘அந்த நாள்’ படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்யன் பேசும்போது, “இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில், மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்தைவிட, பத்து மடங்கு சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என சபதம் எடுத்தேன். நானே கதை, திரைக்கதை அமைத்தேன். தயாரித்து நடித்திருக்கிறேன்.
பட பணிகள் முழுவதையும் முடித்துவிட்டு, கடந்த பிப்ரவரியில் சென்சாருக்கு படத்தை அனுப்பி வைத்தோம். நரபலி, பில்லி சூனியம் மற்றும் அதிரடி காட்சிகள் இருப்பதால், சான்றிதழே கொடுக்க முடியாது என்றனர். அதாவது படத்தை திரையிடவே முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பினோம். நடிகை கவுதமி தலைமையிலான அந்த கமிட்டி படத்தை பார்த்தது. சில கட்டுகள் கொடுத்து, ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. இதையடுத்து விரைவில் படம் வெளியாகிறது.
‘அந்த நாள்’ படத்தை நானே தயாரித்து நடித்திருந்தாலும், ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் வராத அளவுக்கு, அதி பயங்கரமான அதிர வைக்கும் காட்சிகள் பல உள்ளன.
ஏவி.எம். நிறுவனம் பாரம்பரியமிக்கது.அதனால் நரபலி தொடர்பான இப்படம் ஏவி.எம். பெயரில் வெளியாகாது. கிரீன் மேஜிக் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் பெயரில்தான் வெளியாகும். கர்ப்பிணி பெண்கள், பயந்த சுபாவம் கொண்டவர்கள் ‘அந்த நாள்’ படத்தைப் பார்க்க வராதீர்கள். படத்தின் வசூல் முக்கியம்தான் என்றாலும், அதைவிடவும் என்னால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் இருப்பதாலும்தான் இதைச் சொல்கிறேன்…” என்றார்.
**-இராமானுஜம்**