தமிழ் சினிமாவில் தமிழக மக்களின் கனவு நாயகர்களாக இருந்தவர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். இவர்கள் பிறந்த வீடு திரைப்பட துறையினரால், அரசாங்கத்தால் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டது.
எம்.ஜி.ஆர் தான் உயிருடன் இருந்தபோதே தனது சொத்துக்களை உறவினர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளாகப் பராமரிக்கவும் உயில் எழுதிவைத்தவர். தி.நகர் ஆற்காடு தெருவில் தான் பயன்படுத்திய அலுவலகத்தைத் தனது சொந்த செலவில் நினைவு இல்லமாக பராமரிக்க உயில் எழுதிவைத்திருந்தார்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் அப்படி எதுவும் செய்யவில்லை. இவர்கள் காலத்தில் கன்னட சினிமா ரசிகர்களின் கனவு நாயகனாக கோலோச்சியவர் நடிகர் ராஜ்குமார். இவருக்கு நினைவு சின்னங்கள் பெங்களூரிலிருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்த வீடு கர்நாடக மாநிலம் காஜனூரில் உள்ளது.
சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தை வசித்த இந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அங்குள்ள கிராம மக்கள், உறவினர்களுடன் கலந்துரையாடியவர், இதனை ராஜ்குமாரின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும், இங்கு அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்கிற தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் அந்த வீட்டை புனித் ராஜ்குமாரின் ஆசைப்படி நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தொடங்கி உள்ளது. உள்ளூர் கிராமவாசிகள் மூலம் வீட்டை அதன் அசல் வடிவத்திற்கு மீட்டெடுக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் பணிகள், ஓரிரு மாதங்களில் நிறைவடையும் அதன் பின்னர் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கிராமத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணிகளைச் செய்து வரும் ராஜ்குமாரின் மருமகன் கோபால் கூறியிருப்பதாவது, வீடு பரிதாபமாக இருப்பது மிகவும் வேதனையாக இருந்தது. இது கன்னடர்களின் நினைவில் பதிந்திருக்கும் பொன்னான நினைவுகளைக் கொண்டுள்ளது. பாரம்பரியமான தூண்கள் மற்றும் கூரை ஓடுகளை அப்படியே தக்க வைத்துக் கொள்கிறோம். வேலை முடிந்ததும், டாக்டர் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அரிய புகைப்படங்கள் இங்கு வைக்கப்படும் என்றார்.
**-இராமானுஜம்**
�,