நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ தமிழில் நீண்ட காலத்துக்குப் பிறகு கூட்டுக் குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக தயாராகியுள்ளது. இந்தப் படத்தை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார் .
ஶ்ரீவாரி பிலிம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா 6.12.2021 மாலை அண்ணாநகர் வி.ஆர்.மாலில் நடைபெற்றது.
ஆடியோ டேப்பை வெளியிட்டு திரைப்படக் குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “இந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வரவர தமிழ் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை. ஆனந்தம் விளையாடும் வீடு தலைப்பை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தா பெரியசாமி அற்புதமான கதாசிரியன். நல்ல இயக்குநர். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கை இயக்கும்போது அவனுக்கு இப்படி ஒரு பையன் வருவான் என நினைக்கவில்லை. தலைமுறை கடந்து அவன் மகன் கௌதம் கார்த்திக்குடன் விழாவில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி. ராஜசேகரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். அவர் மகள் இப்போது நடிக்கிறார். அவர்களின் பெற்றோரோடு இருந்து விட்டு, இன்று அவர்களுடன் இருக்கிறேன் மகிழ்ச்சி. ரங்கநாதன் நல்ல தயாரிப்பாளர். இப்படி ஒரு தலைப்பில், கூட்டு குடும்பம் பற்றிய படம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழ்ப் படம், அற்புதமான படம். இந்தப் படம் பார்க்கும்போது நம் கண் கலங்கும்” என்றார்
தயாரிப்பாளர் தனஞ்செயன், “பிரமாண்டமான விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்தே ஒரு மிகப்பெரிய படமாக ரசிகர்களிடம் ஊடகங்கள் மூலம்கொண்டு சேர்த்து, இப்போது படத்தின் வியாபாரத்தையும் முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ரங்கநாதன். அவருக்கு வாழ்த்துகள். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ராஷ்மி ராக்கெட் படத்துக்கு கதை எழுதியிருக்கிறார் நந்தா பெரியசாமி. அவரது இயக்கத்தில் இந்தப் படம் வருவதால் பெரும் வரவேற்பைப் பெறும்” என்றார்
இயக்குநர் விக்ரமன், “ஆனந்தம் விளையாடும் வீடு படத்துக்குத் தலைப்பு, அதுவே அழகு தான். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. 25 வருடங்கள் முன் தர்மபத்தினி படம் வந்தது, அதில் கார்த்தி சாரும், ஜீவிதா மேடமும் நடித்திருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் இன்று இணைந்து நடித்தது, இந்தப்படம் வருவது மகிழ்ச்சி. அந்தப் படம் போல் இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும். சேரன் எப்போதும் நல்ல படங்கள்தான் நடிப்பார். இந்தப் படம் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
இயக்குநர் லிங்குசாமி, “என்னுடைய முதல் படமான ஆனந்தம் படத்துக்கு முதலில் வைத்த தலைப்பு ஆனந்தம் விளையாடும் வீடுதான். அப்போது இந்த டைட்டிலை சேரன் சார் வைத்திருந்தார். அவர் நடிப்பதற்காக வைத்திருப்பதாகவும் இருந்தபோதும் தயாரிப்பாளரிடம் கேட்டுப் பாருங்கள் என்றார். அது சரியாக வரவில்லை அறிமுக இயக்குநர் என்கிற நிலையில் எனக்குள் பயம் இருந்தது. அதனால் எனது அறையில் ஒரு நாள் காலையில் எழுதும் அட்டையில் ஆனந்தம் விளையாடும் வீடு” என்கிற தலைப்பு மறைக்கப்பட்டு “ஆனந்தம்” என்பது மட்டும் பளிச் என தெரிந்தது. இதையே தலைப்பாக வைக்கலாமே என யோசித்தபோது எதற்கும் தலைப்பை வேறு யாரும் பதிவு செய்திருக்கின்றார்களா என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கேட்டபோது ஏற்கனவே பதிவு செய்திருந்தவர்களுக்கான தேதி இரண்டு நாட்களில் முடிவடைய இருந்தது.
அவர்கள் தலைப்பைப் புதுப்பிக்கவில்லை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரியிடம் இந்த தகவலை கூறியபோது கம்பெனிக்கும் இப்போது ஆனந்தம் தேவைப்படுகிறது. அதனால் ஆனந்தம் என்றே தலைப்பை வைத்துவிடலாம் என ஒப்புதல் வழங்கி தயாரிக்கப்பட்ட படம்தான் ‘ஆனந்தம்’ படம். அன்று சேரன் நடிப்பதாக சொன்னது இன்று நடந்திருக்கிறது. ஆனந்தம் திரைக்கதை வளர நந்தா பெரியசாமி தான் காரணம். தோல்வியோ, வெற்றியோ சினிமா பின்னால் ஓடிக்கொண்டே இருப்பான் நந்தா. அவருக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. சினேகன் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் அறிமுகமாகும் ஷ்வாத்மிகாவுக்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகை ஜீவிதா ராஜசேகர், “இத்தனை வருடங்கள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி. என் கணவரை அறிமுகப்படுத்தியது பாரதிராஜா சார்தான். என் இரண்டு மகள்களும் படத்தில் நடிக்கிறார்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள். என் இளைய மகள் இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் அவளுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், “இந்தப் படத்தை பார்க்கும்போது பெரிய குடும்பம் படம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நாள் ஓடினாலே, இந்தப் படம் 100 நாட்கள் ஓடும். சேரனுக்காகத்தான் இன்று வந்தேன். அவனை என் மாணவன் என சொல்லிக்கொள்வது எனக்கு பெருமை. நாயகி ஷ்வாத்மிகா அப்பாவை வைத்து படம் எடுத்திருக்கிறேன். அவருக்கு வாழ்த்துகள். சித்துவின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருந்தது. சேரனுக்கு இந்தப் படம் மட்டுமல்லாமல், அவன் நடித்து இன்னும் நிறைய படங்கள் ஓடி வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்
கவிஞரும் நடிகருமான சினேகன், “இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு இங்கு கிடைக்காத அங்கீகாரம் வடக்கு தந்திருக்கிறது. அவர் கதையில் தயாரான ராஷ்மி ராக்கெட் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே வெற்றியை இங்கும் அவர் பெறுவார். உறவுகளின் கதையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். உணர்வுகளையும் உறவுகளையும் சொல்ல களம் கிடைக்காதா என நான் ஏங்கியிருக்கிறேன். அது இந்தப் படத்தில் நந்தா பெரியசாமியால் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு நன்றி. ஒரு குடும்பத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் தந்திருக்கிறது. சித்துகுமார் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவருக்குள் நிறைய திறமை இருக்கிறது. இந்தப் படம் அனைவரின் உணர்வை தொடும்” என்றார்
நடிகர் சரவணன், “ஆனந்தம் விளையாடும் வீடு டைட்டிலில், நந்தா பெரியசாமி வந்து கதை சொன்னபோதே நான் கண்கலங்கி விட்டேன். நான் அஞ்சு அண்ணன் தம்பிங்களோட பிறந்தவன். அந்த உறவு எனக்குத் தெரியும். நான்தான் நடித்தேன். ஆனால், படம் பார்க்கும்போதே அழுகை வந்தது. நந்தா பெரியசாமிக்கு என் நன்றி. குறைவானவர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம். ஆனால், இதில் பெரிய நட்சத்திரக் கூட்டத்தை வைத்து படம் எடுத்திருக்கிறார் ரங்கநாதன். அருமையாக எடுத்திருக்கிறார். ஒரு ஷோவில் கலந்து கொண்டதால், நானும் சேரனும் எதிரிகள் போன்று சித்திரித்து விட்டார்கள். ஆனால் அது செட்டப் என்பது வெளியுலகுக்கு தெரியாது. உண்மையில் நாங்கள் சகோதரர்கள் போலதான் இருக்கிறோம். அவர் ஒரு தம்பியாக எனக்கு கிடைத்துள்ளார். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் சேரன், “சித்துகுமார் இப்போதுதான் வளர்கிறார். இந்தப் பாடலை நந்தா போட்டு காட்டிய பிறகு, சித்துவைப் பார்த்தபோது இவரா இசையமைத்தார் எனத் தோன்றியது, நம்பவே முடியவில்லை. அவர் நன்றாக வர வேண்டும். சினேகன் நல்ல கவிஞர். தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள் வாழ்த்துகள். இந்த இருவருக்குத்தான் இந்த விழா. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். இந்தப்படம்தான் எங்களுக்கு கொரோனா காலத்தில், மூன்று மாதம் சாப்பாடு போட்டது, அந்த தர்மமே இந்தப் படத்தை வெல்ல வைக்கும். எதையும் சரியாக திட்டமிட்டு செய்கிறார்.
நந்தா பெரியசாமி என்ற நண்பன் ஒருவனுக்காக மட்டுமே செய்த படம்தான் இது. அவரது வெற்றிக்கு ஒரு அணிலாக இருக்க வேண்டுமென்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். நல்ல சிந்தனையாளன் தோற்கக் கூடாது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பெரிய வெற்றி பெறுவார். நிறைய கதைகள் வைத்துள்ளார். அவரை விட்டு விடாதீர்கள். அவர் பின்னால் நான் நிற்பேன். இந்தப் படத்தில் எங்கள் குடும்பம் மொத்தமாக இங்கு இருக்கிறது. எனக்கு அண்ணன், தம்பி இல்லை. அதை இந்தப் படத்தில் வாழ்ந்து அனுபவித்தேன். அவ்வளவு அழகாக எல்லோரும் கேரக்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கௌதம் கார்த்திக் அத்தனை எளிமையாக இருக்கிறார். அவரது குரல் அப்படியே கார்த்திக் சார் போலவே இருக்கிறது. ஷ்வாத்மிகா நம்ம வீட்டு பிள்ளை. ராஜசேகரின் மகள் அருமையாக நடித்திருக்கிறார். இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்
இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீவாரி பிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேசுகையில், “இந்தப் படத்தை விளையாட்டாக ஆரம்பிக்கவில்லை. கஷ்டப்பட்டுதான் இதை உருவாக்கியிருக்கிறோம். அத்தனை ஆர்ட்டிஸ்டும் கடுமையான ஒத்துழைப்பு தந்தார்கள். சேரன் சார் எனக்கு ஓர் அண்ணன்தான். அவர் இந்தப்படத்தில் எல்லா வேலையும் செய்தார். சித்துகுமார் அருமையான பாடல்கள் தந்திருக்கிறார். இந்தப் படத்துக்கு சினேகனுக்கு தேசிய விருது கிடைக்கும். நந்தா உண்மை, உழைப்பு, உயர்வு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பார். எப்போதும் உழைத்து கொண்டே இருப்பார். இந்தப் படத்தில் அனைவருமே கடுமையான உழைப்பை தந்திருக்கிறார்கள். படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் கொண்டு வர வேலை செய்து வருகிறோம். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்றார்
இசையமைப்பாளர் சித்துகுமார், “ஆனந்தம் விளையாடும் வீடு பாடலுக்காக இயக்குநருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதில் சினேகன் சார், நல்ல பாடல் வரிகள் தந்தார். நான் அனுபவிக்காத வாழ்க்கை இந்தப் படத்தில் இருந்தது. அதையெல்லாம் குழுவாக இணைந்து தான் உருவாக்கினோம். ஒரு பாடலை ஜீவியும் சிவாங்கியும் படினார்கள். மதுரைக்காகவே ஒரு பாடல் செய்திருக்கிறோம். படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்
ஒளிப்பதிவாளர் போரா பால பரணி, “தினமும் நாம் பார்த்துட்டு இருக்குற உறவுகளோட கதையை நந்தா படமா எடுத்திருக்காரு. என்னையும் இந்த புராஜெக்ட்ல சேர்த்து கொண்டதற்கு நன்றி. நந்தாவோட கதையில் இந்தியில் ராஷ்மி ராக்கெட் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கு, அதே போல இந்தப் படமும் வெற்றி பெறணும். நந்தாவிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. அவரோடு இன்னும் நிறைய படங்கள் இணைந்து பணியாற்றுவேன் என நம்புகிறேன். சித்துகுமார் தாளமும் எனது ஒளியும் படத்தில் பேசியிருக்கிறது. சினேகன் அழகான வரிகள் தந்திருக்கார். படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்
நாயகி ஷிவத்மிகா ராஜசேகர், “இது எனது முதல் படம், எனக்கு தமிழ் நன்றாகவே வரும், இங்கு வந்தவுடன் பயம் வந்துவிட்டது. இந்தப் படத்தில் வாய்ப்பு தந்த நந்தா சார், ரங்கநாதன் சாருக்கு நன்றி. சேரன் சாருடன் முதல் படத்திலேயே நடிப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.
நடிகர் கௌதம் கார்த்திக், “இந்த மேடையில் ஜாம்பவான்கள் உடன் இருப்பது பெருமையாக இருக்கிறது. எல்லோரைப் பற்றியும் அனைவரும் பேசி விட்டார்கள். பைட்டர் தினேஷ் இதில் அழகாக வேலை பார்த்துள்ளார். அவருக்கு நன்றி. ராதிகா மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. நிறைய குட்டீஸ் இந்தப் படத்தில் அழகாக நடித்துள்ளார்கள். ஷ்வாத்மிகா அறிமுகமாகியுள்ளார் அவருக்கு வாழ்த்துகள். சேரன் சாருடன் தான் அதிக காட்சிகள் நடித்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். அவருக்கு நன்றி. சித்துகுமார் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகான வரிகள் தந்த சினேகனுக்கு நன்றி. இந்தப் படம் அழகாக வந்துள்ளது. பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என தெரிவித்தார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி, “தயாரிப்பாளர் ரங்கநாதன் படம் ஆரம்பிக்கும்போது ஒன்று சொன்னார். 5,000 ரூபாய் நஷ்டம் வந்தால்கூட தாங்க முடியாது, பார்த்து பண்ணி தாருங்கள் என்றார். நானும் மிடில் கிளாஸ் தான் சார் என்று அவருக்கு கொடுத்த வார்த்தையை நிறைவேற்றி கொடுத்தேன். அதற்கு உதவிய கலைஞர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி. ஒரு நல்ல படத்தை செய்திருக்கிறேன்” எனக் கூறினார்.
**-அம்பலவாணன்**
�,”