அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்காதது ஏன்? காரணமும் விளக்கமும்!

Published On:

| By Balaji

இந்திய அளவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி. அதுபோல, இந்த வருடம் அதிக படங்கள் ரிலீஸாக இருப்பதும் விஜய் சேதுபதிக்குத்தான். அந்த அளவுக்கு அடுக்கடுக்காகப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதுவரை, விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படமும், தெலுங்கில் உப்பென்னா படமும், நலன்குமாரசாமி இயக்கத்தில் குட்டி ஸ்டோரி படங்களும் வெளியாகியிருக்கிறது.

அடுத்தடுத்து படங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சொல்லப் போனால், விஜய் சேதுபதி பாலிவுட்டில் இந்தப் படத்தின் மூலமாகத்தான் அறிமுகமாக இருந்தார். திடீரென இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாகச் செய்திகள் பரவின.

அமீர் கான் நடிப்பில் உருவாகிவரும் படம் லால் சிங் சத்தா. இந்தப் படத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதியைத் தேடி, அவர் நடித்துக் கொண்டிருந்த கிராமத்துக்கே வந்தார் அமீர் கான்.அதுபோல, விஜய் சேதுபதியும் இந்தப் படத்துக்கான பணிகளுக்காகச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில், திடீரென படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டானதால், அமீர் கான் படத்துக்கு குறிப்பிட்ட தேதியை ஒதுக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவல்படி, இந்தப் படத்துக்காக அமீர் கான் 20 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைக்கிறார். அதுபோல, விஜய் சேதுபதி நடிக்கும் கேரக்டருக்கும் உடல் எடையைக் குறைக்குமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி அப்படி உடல் எடையைக் குறைக்க முடியாததால், படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதை மறுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. கொரோனாவினால் தள்ளிப்போன பழைய படங்களுக்கு, இப்போது தேதி கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் நடிக்க முடியவில்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

டாம் ஹாங்க்ஸ் நடித்து ஆஸ்கரில் ஆறு விருதுகளை வென்ற ‘ஃபாரஸ்ட் ஹம்ப்’ படத்தின் இந்தி ரீமேக்தான் அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பதால், விஜய் சேதுபதியின் பாலிவுட் அறிமுகமாக மெளனப் படமான ‘காந்தி டாக்கீஸ்’ இருக்கும். அதோடு, மாநகரம் பட இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்துவருவது கூடுதல் தகவல்.

**- ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share