e‘வாணி ராணி’ சீரியல் நடிகைக்கு கொரோனா!

Published On:

| By Balaji

தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்லவும் கூட பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ‘வாணி ராணி’ தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நவ்யா சுவாமி தெலுங்கு சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த தெலங்கானா மாநில அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் சில நாட்களாக தொடர்ந்து தலைவலியால் அவதிப்பட்டு வந்த நடிகை நவ்யா மருத்துவரின் அறிவுரைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நவ்யாவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். [தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் தகவலை நடிகை நவ்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.](https://www.instagram.com/tv/CCGjd7UDwh2/?utm_source=ig_web_copy_link)

அவர் தனது பதிவில், **“ஆம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உண்மைதான். அது தெரிய வந்தவுடன் தான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். தேவையான மருந்து மற்றும் உடற்பயிற்சி மூலம் என்னைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன். நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் விதமான சத்து நிறைந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வருகிறேன்.

கடந்த ஒரு வார காலமாக என்னுடன் தொடர்பு இருந்த எனது நண்பர்களையும், பிறரையும் நான் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து பயப்படுவதற்கு எதுவும் கிடையாது. கொரோனா பாதிப்பை அவமானமாக நினைப்பதற்கும் எதுவும் கிடையாது. இது குறித்து பரவி வரும் தவறான வதந்திகளை நினைத்து கவலைப்படாதீர்கள். தைரியமாக அமைதியாக இருப்பது தான் முக்கியம். வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால் அதையும் கடந்து உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். அந்த வைரஸ் இறந்து போகும் வரையில் கவனமாக இருங்கள். அது மட்டுமே நாம் இந்தப் பரவலைத் துண்டிப்பதற்கான ஒரே வழி. உங்கள் அனைவருடைய பிரார்த்தனை மற்றும் கடவுளின் ஆசீர்வாதத்தால் நான் நலமாக இருக்கிறேன். மிக விரைவில் இதிலிருந்து மீண்டு வருகிறேன்”** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel