o‘சூரரைப்போற்று’ படத்தில் அக்‌ஷய் குமார்

Published On:

| By admin

‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ‘சூரரைப்போற்று’. 2020ஆம் ஆண்டு கொரோனா பிரச்சினைகளால் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. கேப்டன் கோபிநாத் அவருடைய புத்தகத்தை தழுவியதுதான் படத்தின் கதைக்களம். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் சுதா கொங்கரா அறிவித்தார். பாலிவுட்டில் இந்தக் கதையில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கிறார். தமிழில் தயாரித்த சூர்யா- ஜோதிகாவின் 2டி நிறுவனமே இந்தியிலும் தயாரிக்கிறது. அதேபோலவே, ஜி.வி.பிரகாஷ் இந்தி ‘சூரரைப்போற்று’ படத்துக்கும் இசையமைக்கிறார்.
இது குறித்தான படங்களை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, ‘இது எங்களுக்கு புது தொடக்கம். உங்கள் அனைவரது ஆசீர்வாதமும் தேவை’ என பகிர்ந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘கே.ஜி.எஃப்’, ‘புஷ்பா’ போன்ற படங்களை தயாரித்த ஹாம்பிள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக அறிவித்தார்கள். அதில் கதாநாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்தி ‘சூரரைப்போற்று’ பட வேலைகள் ஆரம்பித்து விட்ட நிலையில் இந்தப் படத்துக்குப் பின்புதான் சுதா கொங்கரா தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பிப்பார்.
நடிகர் சூர்யாவும் தற்போது இயக்குநர் பாலாவின் படம், அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.
**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel