அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று வெளியானது.
அஜித்குமாருக்கு ஆன்மீக அடிப்படையில் ராசியான நாள் என்பதால் வியாழக்கிழமை படம் ரீலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டது என தயாரிப்புத் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இயல்பாக அமைந்த வெளியீட்டு தேதி அரசியலாகப் பார்க்கப்படுவதைத் தவிர்க்குமாறு அஜித்குமார் தரப்பில் அறிக்கை ஒன்றின் வாயிலாக ஊடகங்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
வலிமை படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி வெளியானதால் அஜித்குமார் அரசியலுக்கு வருகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பேசியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை மறுத்து, அஜித்தின் பத்திரிகை தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகவியலாளர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**