பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் பூஜா ஹெக்டேயுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத்
தயாரித்துள்ளனர்.
இப்படம் ஜனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட பன்மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
ஜனவரி 7 ஆம் தேதியன்று வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ராதேஷ்யாம் படத்தை திரையிடத் திரையரங்குகள் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்தாலும் தயாரிப்பு தரப்பில் குழப்பம் ஏற்படும் வகையில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் ராதே ஷ்யாம் பட இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், நேரங்கள் கடினமானவை… இதயங்கள் பலவீனமானவை… மனங்கள் குழப்பத்தில் உள்ளன. வாழ்க்கை நம்மை நோக்கி எரிந்தாலும் நமது நம்பிக்கைகள் எப்போதும் உயர்ந்தவை. பாதுகாப்பாக இருங்கள். உயர்வாக இருங்கள்” என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
அவரது இந்த பதிவை பார்க்கையில் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறீர்களா? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, அப்படியான திட்டங்களை வைத்திருந்தால் அதை நேரடியாகத் தெரிவித்து இருப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் இந்தப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்நிறுவனம் இப்படத்தை வெளியிட்டால் அதிகத் திரையரங்குகள் தமிழகத்தில் இந்தப்படத்துக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாத்தே வழியில் வலிமை படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு பொங்கல் விடுமுறை முடிவதற்குள் அசலை வசூல் மூலம் பெற்றுவிட வேண்டும் என்கிற வினியோகஸ்தர்களின் திட்டத்திற்குப் போட்டியாக ராதேஷ்யாம் வருகிறது என்கின்றனர்.
திரையரங்குகள் வட்டாரத்தில் அஜித்தின் வலிமை படத்துக்குப் போட்டியாக இப்படம் உருவெடுக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் வலிமைக்கு எதிரான மீம்ஸ்களை இப்போதே உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் மதுரையில் வெளியிட்ட போஸ்டர் ஆளும்கட்சியை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தை நடத்தி அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கக் கூடாது, ரசிகர்மன்ற காட்சி நடத்த அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எழுதி வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் வீரமே வாகை சூடும், ராதேஷ்யாம் படங்களுடன் போட்டிப்போடுவதுடன் அரசு நிர்வாகத்துடன் மல்லுக்கட்டவும் வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது வலிமை படத்திற்கு.
**-இராமானுஜம்**
�,”