தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது. பாகுபலி, புஷ்பா, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் படைப்புரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்று வடக்கிலும் சாதனை நிகழ்த்திய படங்களாகும்.
இதனால், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்கள் அதிக அளவில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கும், இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கும் இடையில் ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கன்னட நடிகர் கிச்சா சுதீப், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ‘R: The Deadliest Gangster Ever’ என்ற திரைப்படத் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கன்னட படமான கேஜிஎஃப் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். நான் ஒரு சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி இல்லை. இந்தி நடிகர்கள் இன்று பான் இந்தியா படங்களில் நடிக்கிறார்கள். அவர்கள், தங்களது படங்களை தெலுங்கு மற்றும் தமிழில் டப்பிங் செய்து வெற்றியைக் காண போராடுகிறார்கள். அது நடக்கவில்லை. ஆனால் நாம், இங்கு எங்கு வேண்டுமானாலும் செல்லும் படங்களைத் தயாரித்து வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்தி நடிகர் அஜய் தேவ்கன், தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கிச்சா சுதீப்பை டேக் செய்து, தனது பதிவின் மூலம் அவரது கருத்துக்கு தன் பதிலை தெரிவித்தார். அந்தப் பதிவு முழுவதையும் இந்தியிலேயே பதிவிட்டுள்ளார். அதில், சகோதரரே, உங்கள் கருத்துப்படி இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தாய்மொழி. நமது தேசிய மொழி. எப்போதும் அதுதான் தேசிய மொழியாக இருக்கும். ஜன கன மன என அவர் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அவருக்கு கிச்சா சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக பதிலளித்தார்.
அதில், “நீங்கள் இந்தியில் அனுப்பிய உரை எனக்குப் புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தியை மதித்து, நேசித்து, கற்றுக்கொண்டோம். குற்றமில்லை சார். ஆனால் எனது பதிலை கன்னடத்தில் தட்டச்சு செய்தால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்லவா சார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், “நீங்கள் ஒரு நண்பர். தவறான புரிதலை நீக்கியதற்கு நன்றி. நான் எப்போதுமே சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைத்தேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருக்கலாம்” என்று கூறினார்.
இந்த நிலையில், இந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்காக சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் அஜய் தேவ்கனை விமர்சிக்க தொடங்கினார்கள்.
இந்தியாவில் தேசிய மொழி என ஒன்று கிடையாது. ஆட்சி மொழிகளாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் ஒன்றுதான் இந்தி. தவறான தகவலை பதிவு செய்ததற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல நெட்டீசன்கள் ட்வீட் செய்தனர். ஒரு மொழியில் பிற மொழி படங்கள் டப் செய்யப்படுவதால் அது தேசிய மொழியாக மாறிவிடுமா? உங்கள் பொது அறிவு அபாரம் என நெட்டீசன் ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
மற்ற மொழி திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்படுவதுதான் உங்கள் பிரச்சினையா? அப்படியென்றால், இனி இந்தி படங்களை வேறு மொழிகளில் டப் செய்யப்படுவதை நிறுத்திவிடுங்கள் என ஒருவர் ட்வீட் செய்திருந்தார். இரண்டு முன்னணி நடிகர்களுக்கு இடையே நடைபெற்ற ஆரோக்கியமான விவாதம், தேசிய அளவில் விவாதப் பொருளானது. வழக்கம்போல நடிகர்களின் ரசிகர்கள் அவரவர் தரப்புக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
தமிழ் ரசிகர்கள் இதை வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மட்டுமே நேற்று வரை இருந்தனர். இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்றே இல்லாதபோது இந்தி எப்படி தேசிய மொழி ஆகும் என நெட்டீசன்கள் கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாத தேவ்கன், “அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்” எனக் கூறும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.
இதனால் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது போல தெரிந்தது. ஆனால், அஜய் தேவ்கன் விட்டாலும் அவரது ரசிகர்கள் இந்தப் பிரச்சினையை விடுவதாகத் தெரியவில்லை. ட்விட்டரில் அஜய் தேவ்கனுக்கு ஆதரவாக அவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதிலும் சில ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, அஜய் தேவ்கன் போலீஸாக நடித்த ‘சிங்கம்’ பட ஸ்டில்களை போஸ்ட் செய்து, “எங்க ஆளு ரியல் சிங்கம்டா… மோதி பார்க்காதீங்க” என்ற ரேஞ்சுக்கு பில்டப் செய்து வந்தனர்.
பார்வையாளர்களாக இருந்து வந்த தமிழ் ரசிகர்கள், குறிப்பாக நடிகர் சூர்யா ரசிகர்கள் நேற்று களத்தில் குதித்தனர். அதற்கு காரணம், நடிகர் அஜ்ய தேவ்கனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் அவரை ரியல் சிங்கம் என ஒருபுறம் புகழ்ந்து தள்ளி #SinghamOurRealHero என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்க, தமிழ் ரசிகர்கள், தம்பி நீங்க ரீல் சிங்கம்தான்… நாங்கதாம்பா ரியல் சிங்கம் என ட்விட்டரை தெறிக்கவிட்டனர்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வெற்றிபெற்ற ‘சிங்கம்’ திரைப்படம்தான், இந்தியில் அதே பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்த நிலையில், ‘ரீ மேக்’ படம் என்று கூட தெரியாமல் அந்தப் படத்தின் புகைப்படங்களை வைத்து அஜய் தேவ்கனை ‘ரியல்’ சிங்கம் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர்.
இதைப் பொறுக்க முடியாத தமிழ் ரசிகர்கள், சூர்யாவின் சிங்கம் பட புகைப்படங்களை வைத்து, தம்பி நாங்கதான் ரியல் சிங்கம். நீங்க ரீமேக் செய்யப்பட்ட ரீல் சிங்கம். இது கூட தெரியாமல் போஸ்ட் வேறு செய்கிறீர்களே… என கலாய்த்து வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கன்னட, மலையாள, தெலுங்கு ஆகிய மொழி ரசிகர்களும் அஜய் தேவ்கனை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்
இரண்டு முன்னணி நடிகர்கள் மொழி சம்பந்தமான கருத்துகளை பொதுவெளியில் வெளியிட்டு எல்லா மொழிகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து பலப்பட்டு வந்த நிலையில் நடிகர்களின் ரசிகர்கள் வழக்கம்போல் அந்த விவாதத்தைத் திசை திருப்பி தனிமனித துதி பாடி அர்த்தமற்றதாக்கிவிட்டனர்.
**-இராமானுஜம்**
அஜய் தேவ்கன் Vs கிச்சா சுதீப்: களத்தில் குதித்த சூர்யா ரசிகர்கள்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel