பணம் – அரசியல் – கொரோனா: ஒலிம்பிக்கில் ஆடு புலி ஆட்டம்!

entertainment

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானில் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டி நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகமும் குழப்பங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினரான டிக் பவுண்டு நேற்று (மார்ச் 23) கொடுத்த பேட்டியில் “ஒலிம்பிக் தள்ளிப்போவது உறுதி. ஆனால், அனைத்து வழிகளையும் முயற்சி செய்து பார்த்த பிறகே அதற்கான அறிவிப்பை வெளியிட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

கொரோனா நோய் தொற்றினால், உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு மிக மோசமான சூழலைச் சந்தித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளின் ஓரத்திலிருந்தும் டோக்கியோவுக்கு வருகை தரும் விளையாட்டு வீரர்கள், அவர்களின் உறவினர்கள், பார்வையாளர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் ஆகியோரின் மூலமாக கொரோனா மேலும் பரவுவதற்கான அச்சம் நிலவுகிறது. தங்கள் நாட்டின் சொத்துகளாகப் பராமரித்து வரும் விளையாட்டு வீரர்களை கொரோனாவுக்கு இரையாக்க பலரும் விரும்பவில்லை. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிப்போட ஒலிம்பிக் கமிட்டி ஏன் இவ்வளவு முரண்டு பிடிக்கிறது என்ற கேள்வி முக்கியமானது.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி கிட்டத்தட்ட 1200 கோடி டாலர்களுக்கு நிகராக மதிப்பிடப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஸ்பான்சர்கள், விளம்பர வருவாய், தொலைக்காட்சி ஒளிபரப்பு எனப் பல்வேறு வகையிலும் ஒலிம்பிக்குக்காக அதிக பணம் செலவிடப்பட்டிருக்கிறது. மேலும், ஒலிம்பிக் கிராமத்தை உருவாக்க பல நூறு கோடிகளும், அதைப் பராமரிக்க சில நூறு கோடிகளும் செலவிடப்பட்டிருக்கின்றன. இப்படி கோடி கோடியாகக் கொட்டப்பட்ட பணம் அனைத்தும், ஒலிம்பிக் போட்டியைத் தள்ளிவைப்பதன் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஜப்பான் நாடுதான். எனவே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கும் டோக்கியோ ஒலிம்பிக் விழா ஏற்பாடு நிர்வாகத்துக்கும் இடையே பரஸ்பர புரிதலுடன் இந்த தள்ளிவைப்பு நடைபெற வேண்டும். இல்லையென்றால், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக பல ஆயிரம் கோடிகளை நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டியதிருக்கும். ஆனால், ஜப்பான் அரசு பரஸ்பர புரிதலுக்குத் தயாராக இல்லை. விளையாட்டுக்குள் அரசியலைப் புகுத்தி வேடிக்கைப் பார்த்தது.

கொரோனா அச்சம் தொடங்கியதிலிருந்தே ஒலிம்பிக் நிர்வாகம், இந்தப் போட்டிகளை நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தது. ஒலிம்பிக் கமிட்டியின் பரிந்துரைகள் அத்தனையையும் தூக்கி வீசிவிட்டு [மார்ச் 12ஆம் தேதி](https://minnambalam.com/entertainment/2020/03/12/54/programs-functions-are-getting-cancelled-due-to-corona-virus) டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோக் “கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறமுடியாவிட்டாலும், போட்டிகளை ரத்து செய்யும் திட்டமே இல்லை” எனத் தெரிவித்தார். அதன்பிறகு பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகமானதால், ஒலிம்பிக் கமிட்டியுடன் சில பேச்சுவார்த்தைகளை நடத்தியது டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகம். ஆனால், அதற்குள்ளாக ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் எங்களால் கலந்துகொள்ள முடியாது என்று அறிவித்தன. அந்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. இது ஜப்பான் அரசைக் கோபப்படுத்தியது.

ஒலிம்பிக்கை நடத்தும் டோக்கியோ அரசும், ஜப்பான் அரசும் முடிவெடுப்பதற்கு முன்பு மற்ற நாடுகள் 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெற வேண்டும் என முடிவெடுத்துப் பேசியதால், ‘திட்டமிட்டதுபோல நாங்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்துவோம். இதுபற்றிய முடிவு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமே இருக்கிறது’ என அவர்கள் தலையில் கையை வைத்தனர். ஒலிம்பிக்கைத் தள்ளிவைத்தால், இதுவரை செலவு செய்த பணத்துக்கு ஜாமீன் கொடுக்கவேண்டிய பொறுப்பு வந்துவிடும் என்பதால் ஒலிம்பிக் கமிட்டி திணறியது. எனவே, நாங்கள் நடத்தும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு மெடலை வெல்லுங்கள். இல்லையென்றால் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டது டோக்கியோ அரசாங்கம். ஆனால், இப்போது நிலை மாறி வருகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தரப்பில் ஐ.நா சபை வரை பேசப்பட்டுள்ளதால், விரைவில் இதுகுறித்த முடிவு உலக அரங்கில் பேசப்படும் எனத் தெரிகிறது. எனவே, ஒரு சில வாரங்களில் ஒலிம்பிக் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்பு அதிகம்.

**-சிவா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *