ரஜினி படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்!

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் பைனான்ஸ் வாங்காமல் படம் தயாரிக்கிற நிறுவனங்களில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு முதல் இடம் உண்டு.

2006ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன் – சோனியா அகர்வால் நடித்த திருட்டுப்பயலே படத்தின் மூலம் படத் தயாரிப்பைத் தொடங்கியது. சினிமா தயாரிப்பதைத் தொழிலாகச் செய்பவர்களுக்கு மத்தியில் கௌரவத்திற்காகப் படங்கள் தயாரிக்கும் தொழிலை ஏஜிஎஸ் நிறுவனம் மேற்கொள்வதாகக் கூறுவார்கள்.

அதனால்தான், இவர்கள் தயாரிப்பில் நடிக்கும் நடிகர்கள் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. 35 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்று வந்த நடிகர் விஜய், இவர்களது தயாரிப்பில் பிகில் படத்தில் நடிப்பதற்காக 45 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். ரஜினிகாந்த் நடிக்கும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பான்மையான தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருக்கிறது.

ரஜினிகாந்தை பொறுத்தவரை படையப்பா படத்திற்குப் பின் தன்னுடைய சம்பளம், தயாரிப்பு செலவு இவற்றைத் தாக்குப் பிடிக்கக்கூடிய நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் மட்டும் நடிப்பதைத் தற்காப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்தே படத்தில் நடித்தார். அடுத்து மருமகன் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் தொடர்ச்சியாக நான்கு படங்களில் நடித்து முடிக்க வேண்டிய நெருக்கடியில் தனுஷ் இருப்பதால் இடைப்பட்ட காலத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட ரஜினிகாந்த் எடுத்த முடிவு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நீண்டகால ஆசையை நிறைவேற்றி இருக்கிறது. ஆம் அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து அவர்களது தயாரிப்பில் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தப்படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முழுக்க படமாக்கிவிட்டதாகப் படக்குழுவினர் தரப்பில் அறிவித்திருக்கிறார்கள். அவர் இல்லாத பகுதிகளின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் இருக்கிறது என்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பின்பு படத்தை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் ஓரிரு நாட்கள் ரஜினிகாந்த் நடிக்க வேண்டியிருக்கும் என்று அவரிடம் கூறப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்கிற கேள்விக்கு விடையாகக் கடைசி வரை வந்தவர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இவர்களில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு தேசிங்கு பெரியசாமிக்குக் கிடைத்திருக்கிறது. ஆம்,அவரைத்தான் ரஜினி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று கூறுகின்றனர். ஜகமே தந்திரம் படத்திற்கான எதிர்மறையான விமர்சனங்கள், அதன் தோல்வி கார்த்திக் சுப்புராஜ் தேர்வாகாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர்

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் ரஜினிகாந்த் திரும்பி வந்ததும் இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் , உடனடியாகப் படப்பிடிப்பும் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment