பிரபல நடிகை ராணி சாட்டர்ஜி, ஆன்லைனின் தன்னை இடைவிடாமல் துன்புறுத்திவரும் நபரால் தான் மனச்சோர்வடைந்ததாகவும் இது நீடித்தால் உயிரையும் மாய்த்துக்கொள்வேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராணி சாட்டர்ஜி. இந்திய ஸ்டண்ட் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான கத்ரான் கே கிலாடியில் தோன்றியதன் மூலம் இந்திய அளவில் அறிமுகமான நடிகையானார் இவர். அண்மையில், சமூக ஊடகங்களில் அவர் இட்டுள்ள பதிவில், தான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளதாகவும், ஆன்லைனில் ஒரு மனிதரிடமிருந்து இடைவிடாத துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும், இதற்கு முடிவே கிடைக்காத பட்சத்தில் தனது உயிரை மாய்த்துக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட பதிவில், தனஞ்சய் சிங் என்ற நபரைக் குறிப்பிட்ட ராணி, நீண்ட காலமாக இந்த நபர் தன்னை துன்புறுத்துவதாகவும், உடல்ரீதியாக அவமானப்படுத்துவதாகவும், பல மோசமான சொற்களை பயன்படுத்தி அழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான் கலக்கம் அடைகிறேன். நான் வாழ்க்கையைப் பற்றி ஒரு நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொண்டாலும், அதை என்னால் இனி கையாள முடியாது. இந்த மனிதன் என்னைப் பற்றி பல ஆண்டுகளாக பேஸ்புக்கில் இதுபோன்ற மோசமான விஷயங்களை எழுதி வருகிறார், அதையெல்லாம் நான் புறக்கணித்து வருகிறேன். அவர் என்னை உடல் ரீதியாக அவமானப்படுத்தும்படி பெயர்கள் வைக்கிறார். இதைப் புறக்கணிக்க என்னுடன் இருப்பவர்கள் எனக்கு அறிவுறுத்துகின்றனர். ஆனால் இப்போது இதைப் புறக்கணிக்க முடியாது. நான் ஏமாற்றமடைகிறேன். இதைச் சமாளிக்க எனக்கு இன்னும் பலம் இல்லை. நான் மனச்சோர்வுடன் போராடிக்கொண்டிருக்கிறேன், தற்கொலை செய்து இறக்க விரும்புகிறேன் “என்று நடிகை எழுதினார். மேலும் அவர், தனது இன்ஸ்டாகிராம் இடுகையில், அந்த மனிதர் கூறிய சில கருத்துகளை ஸ்கிரீன் ஷாட்களாகச் சேர்த்துள்ளார்.
தனது இடுகையில் மும்பை காவல்துறையை குறிப்பிட்டுள்ள ராணி, தான் ஏதும் தவறான முடிவெடுத்தால் அதற்கு தனஞ்சய் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார். ராணி சைபர் செல்லில் புகார் அளித்திருந்த போதும், தனஞ்சய் சிங் எந்த பதிவிலும் ராணியின் பெயரை குறிப்பிடாததால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இது போல பல நடிகைகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்து வருவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. பெண்களை தொடர்ந்து போகப்பொருளாக பார்ப்பதும், குறிப்பாக பொதுவெளியில் இயங்கும் பெண்களை அவமதிப்புக்குள்ளாக்குவதன் மூலமும் தங்கள் ஆண்மையை நிரூபிக்க பலரும் முயன்று வருகின்றனர். அண்மையில், இலியானா, ஷ்ரேயா சரண் ஆகியோர் தங்களது ஆன்லைன் உரையாடலில் ரசிகர்களிடமிருந்து சில மோசமான ‘கமென்டுகளை’ பெற்றது நினைவிருக்கலாம். சில ஆண்டுகள் முன் நடிகை பார்வதி தனக்கு வந்த ஆன்லைன் துன்புறுத்தல் குறித்து புகாரும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”