சின்னத்திரை-திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி!

Published On:

| By admin

மணிரத்னம் இயக்கத்தில் 1988ல் வெளியான ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் நடிகையாக அறிமுகமான நிரோஷா ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர்.

இவர் ராதா பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் புதிய, தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும்.
நிரோஷா ராதா விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியை தற்போது துவக்கியுள்ளார்.

இது திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடவுள்ள டென்னிஸ் பால், கிரிக்கெட் போட்டி ஆகும்.
ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான 90 திரைப்பட, சின்னத்திரை நட்சத்திரங்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். ஆறு கேப்டன்கள் இந்த குழுவை வழி நடத்த உள்ளார்கள்.

விஜய் டிவியிலிருந்து மா.கா.பா., சித்தார்த், சன் டிவியிலிருந்து ஆர்யன், அசார் மற்றும் ‘கோலி சோடா’ புகழ் கிஷோர் உள்ளிட்டோர் இந்த நட்சத்திர அணியை வழி நடத்த இருக்கின்றனர்.லீக் போட்டிகளில் விளையாட உள்ள இந்த அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் முன்னிலை வகிக்கும் இரண்டு அணிகள் அரையிறுதி போட்டிக்கும், அதை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கும் முன்னேறுவார்கள்.

இறுதிப் போட்டியில் வெல்பவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் மற்றும் பல பரிசுப் பொருட்களும் வழங்கப்பட இருக்கிறது. இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த நிகழ்ச்சியை வழங்கும் எம்.ஏ.ஆர்.சி. (MARC)யுடன் இணைந்து வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையை வழங்க இருக்கிறார்.

இந்த கிரிக்கெட் போட்டி சென்னையில் போரூருக்கு அருகிலுள்ள கோவூரில் அமைந்துள்ள உள்ள டென்னிஸ் விளையாட்டு நகரத்தில் வரும்
ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது.

**- அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share