இந்தியில் 1986ஆம் ஆண்டு வெளியான மைனா பியார் கியா என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ. இந்தியா முழுவதும் மிகப் பெரிய வெற்றியை பியார் கியா படம் பெற்றாலும் பாக்யஸ்ரீ மேற்கொண்டு படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டாமல், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.
இந்நிலையில், திருமணம் முடிந்து குழந்தைகளும் பிறந்த பிறகு, மீண்டும் பல்வேறு மொழிப் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் பான் இந்தியா படமான ராதேஷ்யம் படத்தில் பிரபாஸின் அம்மா வேடத்தில் பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை பாக்யஸ்ரீ, பாலிவுட்டில் தற்போது பழைய கதைகளின் காப்பி ஸ்கிரிப்ட்கள்தான் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், “தெலுங்கு, மலையாள இண்டஸ்ட்ரியில் புதிய ஸ்கிரிப்ட்களும், புதிய கதைகளும் வந்து கொண்டிருக்கிறது. புதிய திறமைசாலிகள் ஒடிடி தளங்களில் புதிய படைப்புகளை படைத்து வருகிறார்கள். இந்திய சினிமாவின் நிலை நாளுக்கு நாள் சர்வதேச அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பகுதி சினிமா ரசிகர்களும் இப்போது பான் இந்தியா திரைப்படங்களையும், அதுபோன்ற கதைகளையும் விரும்புகிறார்கள். மொழி வேறுபாடின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்வையாளர்கள் பாராட்டுகிறார்கள். இளம் தலைமுறையினரிடமிருந்து புதிய கதைகள் மற்றும் புதிய திரைப்படங்கள் வெளிவருகிறது. அதனால் நானும் புதிய திறமைசாலி. இளைஞர்களுடன், மக்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
**அம்பலவாணன்**