Wகார்த்தியை அடையாளம் காணாத விஜய்

Published On:

| By Balaji

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான நடிகர்களின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. வெளிமாநிலங்களில் படப்பிடிப்புக்குச் சென்று கொரோனாவுடன் திரும்பிவர நடிகர்கள் விரும்பவில்லை. அதோடு, அவுட்டோர் ஷூட்டிங்கைத் தவிர்த்துவிட்டு, ஸ்டுடியோவுக்குள் நடக்கக்கூடிய காட்சிகளை மட்டுமே பாதுகாப்புடன் படமாக்கி வருகிறார்கள்.

பொதுவாக, ஒரு ஸ்டுடியோவிற்குள் பல படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்துவரும். அப்படி நடக்கும் போது, பக்கத்து செட்டில் இருக்கும் நடிகர்களை மரியாதை நிமித்தமாக சென்று பார்ப்பது வழக்கம். குறிப்பாக, அஜித், விஜய் படங்களின் படப்பிடிப்பு ஒரே ஸ்டுடியோவில் நடந்தால் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். அஜித் ஒரு படி மேலே சென்று, பிரியாணி செய்துக் கொடுத்ததெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அப்படியான, ஒரு சுவாரஸ்ய சம்பவம் சமீபத்தில் நடந்தது.

சென்னை சிட்டி ஸ்டுடியோவில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `பீஸ்ட்` படத்தின் படப்பிடிப்பும், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `சர்தார்` படத்தின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. விஜய் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் தகவல் கேள்விப்பட்டதும், ஓய்வு நேரத்தில் விஜய்யை சந்திக்க சென்றிருக்கிறார் கார்த்தி.

சர்தார் படத்தில் இரண்டு ரோல்களில் கார்த்தி நடிக்கிறார். அதில் ஒரு ரோலில் ஓல்டு ஏஜ் கெட்டப். ஷூட்டிங் முடித்துவிட்டு, அதே கெட்டப்பில் பீஸ்ட் செட்டுக்குள் சென்றிருக்கிறார் கார்த்தி.

படப்பிடிப்புத் தளத்தில் 15 நிமிடத்துக்கு மேல் அங்குமிங்கும் சுற்றி வந்திருக்கிறார். யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. இறுதியாக, விஜய்யிடம் சென்றிருக்கிறார். முதலில் விஜய்க்கும் யாரென தெரியவில்லை. இறுதியாக, கார்த்தியே தன்னை அறிமுகப்படுத்த, விஜய்க்கு ஆச்சரியமாகியிருக்கிறது.

அதன்பிறகு, விஜய்யும், கார்த்தியும் அரை மணி நேரத்துக்கும் மேல் செட்டில் பேசினார்களாம். இருவரும் தங்களின் படங்கள் குறித்துப் பேசிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share