நடிகர் சூரி அளித்த பண மோசடி வழக்கு: சென்னை போலீஸூக்கு மாற்றம்!

Published On:

| By admin

நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீதான வழக்கின் விசாரணையை சென்னை மத்திய குற்றபிரிவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாகக் கூறி, நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இது போன்ற பண மோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கருத்து தெரிவித்தார். மேலும், கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்ற பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி அதை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
**வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share