வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த் மறைவு!

Published On:

| By Balaji

நடிகர் ஸ்ரீகாந்த் (82) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் நேற்று பிற்பகல் காலமானார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள, இவர் 50 படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு 1964-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய வெண்ணிற ஆடை” படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, அவர் ஏற்று நடித்த டாக்டர் சந்துரு என்ற கதாபாத்திரத்திற்குக் கௌரவம் சேர்த்திருப்பார்.

இந்தப் படம் இவருக்கு மட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருக்கும் முதல் படமாகும்.

மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நாடகத் துறையில் இவர் பிரபலமாக இருந்ததால் தனது சொந்தப் பெயரான வெங்கட்ராமன் என்ற பெயரை பயன்படுத்தாமல் ஸ்ரீகாந்த் என்ற பெயரிலேயே சினிமாவிலும் நடிக்கலானார். “வெண்ணிற ஆடை” படத்திற்கு பிறகு இவருக்கு பெரும்பாலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களே கிடைத்தது என்றே சொல்லலாம். இருப்பினும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

அதே சமயம் தன்னால் எந்த கதாபாத்திரமும் ஏற்று நடித்து, அதற்கு பெருமை சேர்க்க முடியும் என்று நிரூபித்தவர் ஸ்ரீகாந்த். குறிப்பாக எதிர் நீச்சல், பூவா தலையா, பாமா விஜயம், மற்றும் காசேதான் கடவுளடா போன்ற படங்களை இவருடைய நகைச்சுவை நடிப்பிற்கு சான்றாகக் கூறலாம். 1972 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.சி.திருலோகச் சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார்.

அதன்பின் தொடர்ச்சியாகப் பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த தங்கப்பதக்கம் திரைப்படம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் எனலாம்.

இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த “ஜெகன்” என்ற கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களான, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘கருணை உள்ளம்’ போன்ற படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த முக்கிய வேடமேற்று நடித்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை மிக்கவர். எம்.ஜி.ஆரோடு மட்டும்தான் இவர் இணைந்து நடிக்கவில்லை.

இயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி கே.பாலசந்தர், ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், பி.மாதவன், கிருஷ்ணன் பஞ்சு மற்றும் எம்.ஏ.திருமுகம் என அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணியாற்றிய சிறப்பு பெற்றவர்.

ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். சென்னையில் அவருடன் வசித்து வந்தார். நேற்று பிற்பகல் இறந்த அவரது இறுதிச் சடங்கு மாலையிலேயே தேனாம்பேட்டையில் உள்ள மயானத்தில் நடந்து முடிந்தது.

**-அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share