நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று(மார்ச் 26) மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். நடிகராக மட்டுமின்றி தோல் மருத்துவ நிபுணராகவும் இவர் பணியாற்றி வந்தார். சந்தானம் மற்றும் பவர் ஸ்டாருடன் இணைந்து நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா’ மற்றும் ‘50/50’ போன்ற திரைப்படங்களிலும் நடித்தார்.
நேற்று(மார்ச் 26) இரவு சென்னையில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன், பல்வேறு திரையுலக நட்சத்திரங்களுக்கு தோல் சம்மந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சையும் அளித்துவந்தார். இவரது மரணம் தமிழ் திரையுலகம் முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
37 வயதாகும் சேதுராமனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டில் உமையாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சேதுராமன்-உமையாள் தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறார். இளம் வயதிலேயே தங்களை விட்டுப்பிரிந்த சேதுராமனின் இழப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று திரைப் பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,