f‘நட்டி’யிடம் மன்னிப்பு கேட்ட அனுராக்

Published On:

| By Balaji

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜிடம் ‘தவறுகள் தன் மீதுதான்’ எனக் கூறி அனுராக் காஷ்யப் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியம், இந்திய அளவில் தெரியப்படும் ஒரு பெயர். குறிப்பாக தொழில்நுட்ப அளவில் இவரது பங்கு முக்கியமானது. தமிழில் நடிகராக நமக்குத் தெரியும் நட்டி, பாலிவுட்டில் தேர்ந்த ஒளிப்பதிவாளராகவும், முக்கியமான தொழில்நுட்ப கலைஞனாகவும் அறியப்படுபவர். இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக இன்று அறியப்படும் அனுராக் காஷ்யப்பும் நட்டியும் ஒருகாலத்தில் மிக நெருங்கிய நண்பர்களாகவும், இணைந்து பணியாற்றிய கலைஞர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்னர், இவர்கள் தங்கள் தனிப்பட்ட பணிகளில் கவனம் செலுத்தத் துவங்கினர். இதனால் சில விலகல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 4 அன்று, நட்டி தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டு, [அனுராக் தன்னை மறந்துவிட்டதாக குற்றம்சாட்டி](https://minnambalam.com/entertainment/2020/06/05/69/latest-cinema-news-natti-natraj-about-anurag), அவரை ‘சுயநலவாதி’ என்று அழைத்தார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில், அனுராக்குக்கு ஆதரவாகச் சிலரும், நட்டிக்கு ஆதரவாகச் சிலரும் பிரிந்து கொண்டு சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில், அனுராக் காஷ்யப் இந்தப் பிரச்சினை தொடர்பாக மனம் திறந்துள்ளார். நட்டியைத் தன் நண்பர் மட்டுமல்ல, அவரது ஆசிரியர் என்றும், தமிழ் சினிமாவுக்குத் தன்னை அறிமுகப்படுத்திய நபர் என்றும் அழைத்த அனுராக், ‘அவருக்குத் தேவைப்படும்போது’ அவருடன் இல்லாததற்கு வருந்துவதாகக் கூறினார்.

நேற்று(ஜூன் 6) இரவு அனுராக் அடுத்தடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,“ஊடகங்களில் நட்டியின் சீற்றம் பற்றி நிறையப் படித்தேன். அவர் என் நண்பர் மட்டுமல்ல, நாங்கள் சினிமாவில் ஒன்றாக வளர்ந்தோம் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எனது ஷாட்டை எனது கேமராமேனுடன் எவ்வாறு விளக்குவது என்று தெரியாதபோது, அவர் எப்படி என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் எனது ஆசிரியர், ஒரு கேமராவை எவ்வாறு நகர்த்துவது என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் எனது முதல் கேமராமேன். அவர் ‘லாஸ்ட் ட்ரெய்ன் டு மஹாகாளி’, ‘பாஞ்ச்’ மற்றும் ‘பிளாக் ட்ரெயின்’ ஆகிய படங்களில் பணியாற்றினார். கடினமான காலங்களில் ஒன்றாக இருந்தோம். தமிழ் சினிமாவுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் நட்ராஜ் தான். இயக்குநர் பாலாவுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் நட்ராஜ் தான். ரஜினி சாரை சந்திக்க வைத்தார்; நான் பார்த்த முதல் தமிழ்ப்படமான செல்வராகவன் இயக்கிய தனுஷ் நடித்த திரைப்படத்தை எனக்குக் காட்டினார். சப்டைட்டில் இல்லாமல் அப்படத்தை பார்த்தேன். அதன் பிறகு நான் மற்ற தமிழ் சினிமாக்களை தேடிப்பார்க்க ஆரம்பித்தேன். ஆகவே, அவர் ஏதோவொன்றால் காயமடைந்து, கோபத்தை வெளிப்படுத்தினால், இரண்டு நண்பர்களுக்கிடையிலான உரிமையில், என்னிடமிருந்த ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பு காரணமாக அது வந்திருக்கும். அவர் அன்பு மற்றும் மரியாதைக்குரிய இடத்திலிருந்து வந்தவர். எனக்கு மிகவும் கற்றுக் கொடுத்ததுடன், எனது தெளிவற்ற ஆண்டுகளில் என்னுடன் இருந்தவர். தயவுசெய்து அவர் சொல்வதைக் கேளுங்கள். நான் அவர் அழைப்பை எடுக்கவில்லை. அவர் செய்து வருவதெல்லாம் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததே. எனவே தயவுசெய்து இந்த விஷயத்தில் அவரை விட்டுவிட்டு எனது அதிகாரபூர்வ அறிக்கையாக இதை கருதுங்கள். அவரது காயம் உண்மையானது. அவருக்கு நான் தேவைப்படும்போது நான் அங்கு இல்லை. இது குறித்து நான் அறியவில்லை. எனவே இதை மிகத் தெளிவாகச் சொல்கிறேன், ஐ ஏம் சாரி நட்டி” எனப் பதிவிட்டுள்ளார்.

Thread ???????? Been reading a lot about @natty_nataraj ‘S outburst being reported in the media . For the record , I want to state here that he is not just my friend but we grew together in cinema . When I did not know how to communicate my shot to my cameraman , he taught me how to ..

— Anurag Kashyap (@anuragkashyap72) June 6, 2020

அனுராக் பதிவைத் தொடர்ந்து, அதற்குப் பதிலளித்த நட்டி, “நன்றி அனுராக் . கடந்த சில நாட்களாக ஊடகங்கள் என்னை மோசமாகச் சித்திரித்துவிட்டது” எனக் கூறினார். இதன் மூலம், இரண்டு கலைஞர்களுக்கு இடையிலான பிரச்சினை சுமுகமான முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், தேவையற்ற வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share