இந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்!

Published On:

| By Balaji

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு இடையே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விவரங்களை நமது மின்னம்பலம் தினசரியில் [முந்நூறு – மூவாயிரம் – முப்பதாயிரம்: கமல் – ஷங்கரின் பிரமாண்டம்!]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/entertainment/2020/02/09/3/all-details-about-indian-2-shooting-spot) என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். பல நூறு குதிரைகள், வீரர்கள் சேர்ந்து பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளை தனித்தனியாகப் படமாக்கி வந்தனர். ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிலர் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்புக்கு இடையே பெரும் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இண்டஸ்ட்ரியல் கிரேன் எனப்படும் மிகப்பெரிய கிரேனைப் பயன்படுத்தி அங்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. கிரேன் முழுமையாக நகர்த்தப்பட்டதன் பின்னரே அதனை மேலே ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் கிரேனை கீழே இறக்கி, அதனை நகர்த்தி பின்னர் மீண்டும் மேலே ஏற்றுவது என்பது படப்பிடிப்புக்கு அதிக சிரமமான வேலையாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 19) ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அறிவுறுத்தலையும் மீறி 150 அடி உயரத்தில் கிரேன் மேலே இருக்கும் நிலையிலேயே அதனை நகர்த்துவதற்கு முற்பட்டுள்ளனர்.

ஆனால், அதிக பாரம் கொண்ட கிரேன் எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்தது. அதில் கீழே பலருக்கும் பெரும் காயங்கள் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஒரு உதவி இயக்குநர், புரொடக்ஷன் டீமில் வேலை பார்க்கும் ஒருவர், ஒரு செட் அசிஸ்டன்ட் என மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் 4 அடி தொலைவில் இருந்த கமல்ஹாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில் கமல்ஹாசனை உடனடியாக அவரது வீட்டிற்கு செல்ல அனைவரும் வற்புறுத்தினர். ஆனால் அவர் அங்கிருந்து செல்வதற்கு மறுத்துவிட்டார். மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான கமல்ஹாசன் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தார்.

இந்த சம்பவம் சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share