�ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக காத்திருக்கும் அயலான் டீம்.. சிவகார்த்திகேயன் பட அப்டேட்ஸ்!

Published On:

| By Balaji

பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். சில வெற்றிகளையும், சில தோல்விப் படங்களையும் கொடுத்துவரும் சிவகார்த்திகேயனுக்கு கடைசி ஹிட் பாண்டிராஜ் இயக்கிய நம்மவீட்டுப் பிள்ளை.

சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளியான ஹீரோ படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில், அடுத்தடுத்து இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் மற்றும் ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படங்கள் தயாராகிவருகிறது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் நெல்சன். அடுத்ததாக, விஜய் 65 படத்தை இயக்க தயாராகிவருகிறார். இவர் இயக்கத்தில் உருவாகிவரும் படமே டாக்டர். சிவகார்த்திகேயனுடன் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. எப்படியும், ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் படத்தை முடித்த சிவகார்த்திகேயன், அயலான் படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். சையின்ஸ் பிக்‌ஷன் திரைப்படமாக அயலான் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது துவங்க இருக்கிறது. இன்னும் படத்துக்கு 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமிருக்கிறதாம். அதோடு, ஒரு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பும் எடுக்க வேண்டியிருக்கிறது. அவற்றை உடனடியாக எடுத்துமுடித்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள் அயலான் டீம்.

ஏலியன் பூமிக்குள் வந்தால் என்னவாகும் என்பதே அயலான் பட ஒன்லைன். சிவகார்த்திகேயனுடன் யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் அதிகமான விஸூவல் எபெக்ட்ஸ் பணிகள் இருப்பதாலேயே படம் தாமதமாகிறதாம். எப்படியும், இந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் உறுதியாக படம் ரிலீஸாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துவருகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். மேலே குறிப்பிட்டதுபோல, படத்திற்கான ஒரு பாடலுக்கான இசை ஏ.ஆர்.ரஹ்மான் தான் தர வேண்டும். சமீபத்தில் ரஹ்மானின் தயாரின் எதிர்பாராத மரணத்தால் பாடலை மெதுவாக வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டார்கள் படக்குழுவினர். தற்பொழுது, பாடலை பதிவு செய்து தர இருக்கிறாராம் ரஹ்மான். விரைவிலேயே அயலான் படப்பிடிப்பு துவங்கும்.

**ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel