வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு குறித்த முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் அனைத்துப் படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கடைசியாக, திரையரங்கில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் வெளியாகி பெரிய ஹிட்டானது. அதோடு, சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் பாவக்கதைகள் ஆந்தாலஜி வெளியானது.
அடுத்ததாக, சூரியை ஹீரோவாக வைத்து படமொன்றை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தில் முக்கிய ரோலில் விஜய்சேதுபதி மற்றும் கிஷோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் முதல் கட்டமானது சத்தியமங்கலம் காடுகளில் சமீபத்தில் நடந்துமுடிந்தது. படத்துக்கான முக்கால் பாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ எனும் கதையை தழுவியே இந்தப் படத்தை உருவாக்கிவருகிறார் வெற்றிமாறன். படத்துக்கு சுவாரஸ்யமான பெயரொன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறது படக்குழு. என்னவென்றால், படத்துக்கு ‘விடுதலை’ என பெயரிட இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ரஜினி நடிப்பில் 1986ல் வெளியான படம் விடுதலை. சுந்தர்.கே விஜயன் இயக்கத்தில் நடிகர் கே.பாலாஜி படத்தைத் தயாரித்திருந்தார். ரஜினியுடன் சிவாஜி கணேசன் & விஷ்ணுவர்த்தன் முக்கிய ரோலில் நடித்திருந்தார்கள். ஒற்றுமை என்னவென்றால் வெற்றிமாறன் படத்திலும் சூரியுடன் விஜய்சேதுபதி & கிஷோர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள்.
நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த படி, விடுதலை எனும் பெயரை தகுந்த தயாரிப்பு நிறுவனத்திடம் முறையாகக் கேட்டுப் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
– தீரன்
�,