2002ஆம் ஆண்டு ஆல்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வசந்தபாலன். இவர், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட முக்கியப் படங்களை இயக்கியவர். தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க ஜெயில் படத்தை இயக்கிவருகிறார்.
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானது வசந்தபாலனின் வெயில் படத்தில் மூலம்தான். இப்போது ஜெயில் படத்தில் ஜி.வி. ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜெயில் படம் முழுமையாக ரெடியாகிவிட்டது, ரிலீஸுக்கான சரியான நேரத்துக்குக் காத்திருக்கிறது.
இந்த நிலையில், வசந்தபாலன் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019இல் வெளியான ‘தி லிஃப்ட் பாய்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் வசந்தபாலன். இந்தப் படத்தில் லீட் ரோலில் நடிக்க அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல். இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தற்போது நடந்துவருகிறது.
கைதி படத்தில் வில்லனாக நடித்து பெரிதும் அறியப்பட்டார் அர்ஜுன் தாஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் அந்தகாரம் ஓடிடியில் ரிலீஸானது. விஜய்யின் மாஸ்டர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். தனித்துவமான குரலே ப்ளஸ். அதனால் சினிமாவில் சீக்கிரமாகவே உச்சம் தொட்டவர் அர்ஜுன் தாஸ். அடுத்த கட்டமாக, தேசிய விருது வென்ற இயக்குநரின் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்தான்.
*ஆதினி*�,