இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து உருவாகிவரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. தற்போது லாக் டெளன் காரணமாக படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல நடிகை பாயல் ராஜ்புத் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வலம் வந்தன. அதைப் பார்த்த பாயல் கோபமடைந்துள்ளார்.
இந்தி சீரியல்கள் மூலமாகத் திரைத் துறைக்குள் வந்த பாயல் ராஜ்புத், பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘ஏஞ்சல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் களமிறங்கவுள்ளார். இந்த நிலையில் தான் ‘இந்தியன் 2’ மற்றும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படங்களில் அவர் நடனம் ஆடுகிறார் என செய்தி வெளியானது. இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, “தயவுசெய்து இவ்வாறு வதந்திகளைப் பரப்பாதீர்கள். என்னைப் பற்றிய இந்த வதந்திகள் எவ்வாறு பரவுகின்றன என்று தெரியவில்லை. நான் எந்தப் படத்திலும் எந்தப் பாடலுக்கும் ஆடவில்லை. என்னை யாரும் இதுபோன்ற விஷயங்களுக்காக அணுகவும் இல்லை.
கடந்த சில நாட்களாக ‘இந்தியன் 2’, ‘புஷ்பா’ போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நான் நடனம் ஆடுகிறேனா என்று கேட்டு தொடர்ந்து எனக்கு மெசேஜ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் வதந்திகள்தாம். நான் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் ஆகவில்லை என்பதைக் கூறிக் கொள்கிறேன். எந்தப் படப்பிடிப்பிலும் நான் கலந்து கொள்ளவும் இல்லை. அமைதியாக இருக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘என் ரசிகர்களுக்கு’ என்று கூறி, “அவசரம் வேண்டாம். நிறைய கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படியான ஒன்றில் நான் ஒப்பந்தம் ஆனதும் நிச்சயம் உங்களிடம் அப்டேட் செய்வேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”