தங்கள் பெயருக்கும், பெருமைக்கும், வசதிக்கும் காரணமானவர் இயக்குநர் கே.பாலசந்தர் என்றும், தங்கள் புகழ் வாழும் வரை அவரது புகழும் நிலைத்து வாழும் எனவும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இயக்குநர் கே.பாலசந்தர் குறித்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஆளுமையாகப் பலராலும் போற்றப்படும் பெருமைக்குரியவர் இயக்குநர் கே.பாலசந்தர். இன்று (ஜூலை 9) அவரது 90ஆவது பிறந்த தினமாகும். தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஏராளமான நட்சத்திரங்களை திரையில் அறிமுகம் செய்த ஆசானாக இருந்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். மனதை விட்டு நீங்காத சிறந்த படைப்புகள் மூலமாக அவர் பலரையும் ரசிக்க வைத்தார். பத்மஸ்ரீ விருது, தாதாசாகிப் பால்கே விருது, 9 தேசிய விருதுகளைப் பெற்ற பெருமைகளுக்கு உரியவரான கே.பாலசந்தர் கடந்த 2014ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இன்று அவரது 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரது தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவின் யூட்யூப் பக்கத்தில் பிரபலங்கள் அவரது நினைவலைகளைப் பகிர்ந்துள்ள வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
**அப்பா-மகனாக மாறிவிட்ட உறவு**
அதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “கே.பி ஐயா அவர்களிடம் முதன்முதலில் வாஹினி படப்பிடிப்பு தளத்தில் ஜெமினி மாமா என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘வெள்ளி விழா’ படப்பிடிப்பு என்று நினைக்கிறேன். ரொம்ப பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தவர், சற்று நின்று என்னை கவனித்தார். அந்தக் கவனிப்பு பிற்பாடு இவ்வளவு பெரிய உறவாக வலுக்கும் என்று கனவு கூட காணவில்லை.
அதற்குப் பிறகு 16 வயது சிறுவனாக அவரிடம் வந்து சேர்ந்தேன். அவர் வாழ்வில், எனக்கு அவர் கொடுத்த இடமும், என் வாழ்வில் நான் அவருக்கு கொடுத்த இடமும் நாங்கள் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. இயற்கையாய் நிகழ்ந்த ஒன்று. இப்போது அது அப்பா – மகன் உறவாகவே மாறிவிட்டது. வீட்டிற்கு வரும் பிள்ளையாக அவர் என்னை நினைக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டன. என்னிடம் நிறைய பேசியிருக்கிறார். அறிவுரை சொல்வதற்காகவும், வசனங்களைச் சொல்லிக் கொடுப்பதற்காகவும், கதைகளைப் பற்றியும் பேசுவார். என்னை நல் வழிப்படுத்துவதற்காகத் திட்டியும் இருக்கிறார். ஆனால், நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட உரையாடல்களில், என் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து பதிவு செய்தால் அது 3 பக்க பேப்பர்களில் அடங்கிவிடும். என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம் என்னவென்றால் அவருடன் கலந்து உரையாடாமல், அவர் செல்வதை எல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்டேன். அதனால் தான் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையப் பெற்றது என்று சொல்லலாம்.
**கமலின் ஆசையை நிறைவேற்றிய கே.பாலசந்தர்**
இப்போது கூட அவர் இருந்திருந்தால் 90ஆவது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றால், நாங்கள் முதலில் போய் அனுமதி கேட்டிருப்போம். அதை எப்படியெல்லாம் செய்யணும், எது செய்யக்கூடாது என்பதை விளக்கி பட்டியல் போட்டு கையில் கொடுத்து விடுவார். என் கதையில் அவர் நடிக்க வேண்டுமென்று நெடுநாள் ஆசை. அதை ‘உத்தம வில்லன்’ படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத் தான் போனார். என்னுடைய வசனங்களைப் பார்க்கும் போது, விமர்சன கண்ணோட்டத்தில் பார்ப்பார். ஒரு ரசிகனாகப் பார்த்து ‘எப்படிடா உனக்கு இப்படி தோணுச்சு’என்பார். கடைசி காலத்தில் மேடைகளில் பேசும் போது என்னை ஒருமையில் பேசுவதா, அவர், இவர் என்று பேசுவதா என அவருக்கு குழப்பமே வந்துவிட்டது. அவருக்கு என்றுமே நான் 16 வயது பையன் தான்.
இன்று அவர் மாதிரியான ஒரு வழிகாட்டி எத்தனை நடிகர்களுக்குக் கிடைப்பார்கள் என்று யோசித்து பார்த்தால், எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தின் ஆழம், வரத்தின் மகிமை இன்று எனக்கு புரிகிறது. கே.பாலசந்தர் என்பவர் எங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை, எங்கள் புகழ் வாழும் வரை அவருடைய புகழும் வாழும். ஏனென்றால் நாங்கள் எல்லாம் அவர் பிடித்து வைத்த பொம்மைகள். பிற்பாடு பேச ஆரம்பித்துவிட்டோம் அவ்வளவே.
**சினிமாத்துறைக்குக் கொடுத்த கொடை**
ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். நட்சத்திரங்களாக மட்டுமல்ல இயக்குநர்களாக, இசையமைப்பாளர்களாக என்று ஒவ்வொரு துறையிலும் ஆள் விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு விழாவுக்கு அவரைப் பற்றி பாராட்டி எழுதி, அது பத்திரிகையில் அச்சிடுவதாக இருந்தது. தன் பேனாவால் அதை அடித்து, இதெல்லாம் எழுதக் கூடாது என்றார். ‘சினிமாத்துறைக்கு நீர் கொடுத்த கொடை போல், நான் யார் கொடுத்தும் பார்த்ததில்லை என் வாழ்நாளில்’ என்று எழுதியிருந்தேன். அதை அன்று அவர் பிரசுரிக்க அனுமதிக்கவில்லை.
இன்று அவர் இல்லை என்ற தைரியத்தில் அதைச் சொல்லி பதிவு செய்கிறேன். எனக்கு கிடைத்த குருமார்களே அற்புதமானவர்கள், அதில் அற்புதமானவர் கே.பி அவர்கள். இப்போது எல்லாம் பொறியாளர் ஆகவேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்றால் ஃபீஸ் கட்டி வரிசையில் நிற்க வேண்டியதுள்ளது. எங்களை எல்லாம் கோடீஸ்வரனாக்கிவிட்டு, அதில் என் பங்கு என்று கொஞ்சம் கூடக் கேட்காமல் சிரித்துக் கொண்டிருந்த அந்த மாதிரி குருக்கள் வணக்கத்துக்குரியவர்கள். குருவை வணங்கும் நாள் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே, எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வேலை செய்யும் நாளெல்லாம் அந்த நாட்களாகவே இருக்கிறது. அவர் புகழ் வாழும், வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**பெயர், புகழ், வசதிக்குக் காரணமானவர்**
அதே போன்று நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, “இன்று என் குருவான கே.பி சார் அவர்களின் 90ஆவது பிறந்தநாள். கே பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பேன். ஆனால், நான் இன்று பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழக் காரணமே கே.பாலச்சந்தர் சார் தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட் எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்ட்களை எனக்கு காண்பித்து என்னை முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து என்று ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். என் வாழ்க்கையில் அப்பா அம்மா அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி இருக்கிறார். என்னுடைய நான்கு தெய்வங்கள்.
**கே.பாலசந்தர் என்னும் மாபெரும் மகான்**
அவர் எனக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். அவரால் வாழ்ந்தவர்கள் பலபலபேர். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமக இருந்துள்ளார். நான் பல இயக்குநர்களிடம் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் கே.பாலச்சந்தர் அவர்களோடு பணியாற்றும் பொழுது திரைப்படம் சூட்டிங் பகுதியில் லைட் செட் போடக்கூடிய எங்கேயோ ஒரு மேலே உட்கார்ந்து இருக்கும் நபர் கூட எழுந்து வணக்கம் செலுத்துவார். அப்படியான ஒரு கம்பீரம் கே.பி அவர்களிடம் இருந்தது. அதுபோன்று நான் வேறு யார் கிட்டயும் இருந்ததில்லை.
கே.பி வாழ்ந்த காலத்தில் மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குனராக அனைத்திலும் பர்பெக்ட்டாக விளங்கினார். இன்னும் நிறைய நாட்கள் அவர் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு பெரிய மகான். அத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்து ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு. அவர்களை இன்று அவரது 90 ஆவது பிறந்தநாளில் நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”