தமிழகத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் சென்னையை மீட்டெடுக்கும் முயற்சியாக ‘நாமே தீர்வு’ என்கிற திட்டத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆரம்பித்துள்ளார்.
நேற்று(ஜூன் 5) உலக சுற்றுசூழல் தினத்தில் ‘உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நாம், இன்று நம் சென்னையையும் வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியதிருக்கிறது.’ என்று குறிப்பிட்டு ‘நாமே தீர்வு’ திட்டம் குறித்து அவர் அறிவித்தார். அதன்படி ‘மக்கள் தங்கள் பிரச்னைகளைத் தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளைத் தேடும் தன்னார்வலராகப் பதிவு செய்யவும், 63698-11111 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டு, ‘இதன் மூலம் உதவிக்குப் பொருட்கள் வழங்குவது முதல், உதவிப்பொருட்களைக் கொண்டு சேர்ப்பது வரை, தன்னார்வலர்கள் செய்ய நிறைய பணிகள் இருக்கிறது. ஒரு கஷ்டமான சூழலிலிருந்து இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளும் சக மனிதனுக்கு தீர்வுகளை வழங்கிட, மக்களால் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் இயக்கம் இது’ என்று கமல்ஹாசன் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். முகத்தில் மாஸ்க் அணிந்து தட்டில் கரண்டியால் தாளம் போட்டுக்கொண்டே “தட்டுல தாளம் போடாதே சோறு கிடைக்காதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க. எல்லா அம்மாவும் அதைத்தான் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். கிட்டதட்ட அது உண்மையாகிடுச்சு. நான் தட்டுனது உங்க கவன ஈர்ப்புக்காக தான். மற்றபடி இது வேலைக்காகாது. கவலைப்படாதீங்க. என்னைப் படம் பிடிக்கிற கேமரா மேன் 12 அடி தூரத்தில் இருக்கிறார்.” என்று தனது வழக்கமான தொனியில் கமல்ஹாசன் பேச ஆரம்பித்தார்.
‘கூட்டை அடைய பல மைல் கற்களை நடந்தே கடக்கும் கால்கள்…..’என்று கவிதை நயத்தில் பேச ஆரம்பித்து, ‘இதுல கவிதை என்ன மண்ணாங்கட்டி’ என்று தன்னைத் தானே விமர்சனமும் செய்துவிட்டார்.
என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது.
தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்திட
63 – 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். #நாமேதீர்வு #NaameTheervu pic.twitter.com/2s3zhwwBaS— Kamal Haasan (@ikamalhaasan) June 5, 2020
தொடர்ந்து பேசிய அவர், “புலம்பெயர் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் தம் சொந்த மாகாணத்துக்கு சென்றடைய கால்கடுக்க நடந்து பசியால் சாவதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். நாள், கிழமை மறந்து இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள், வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், சிதையும் வாழ்வாதாரம், அன்றாடங் காய்ச்சிகள் பசியால் மரணம் நம் எல்லோருடைய அலட்சியம். இதையெல்லாம் பார்க்கும் போது கோபம் கோபமா வருது.
கொள்ளை நோயை சரியான முறையில் அணுகியிருந்தால், அரசு இப்படி செய்திருந்தால், அரசு அப்படி செய்திருந்தால் இதெல்லாம் சொல்லி முடிச்சாச்சு” என்று நாம் கடந்து வந்த பாதையைக் கூறி, “ஆனால் இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை. இது சில்லறை அரசியலுக்கான நேரமும் இல்லை. நாளை என்ன நடக்கும்? இன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான நேரம். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கான நேரம்.” என்று நடக்க வேண்டிய வழியைக் குறிப்பிட்டார்.
மேலும் “இது நாமே தீர்வாகும் நேரம். கொரோனா வந்தா மரணந்தான் அப்படிங்கிற தவறான எண்ணத்தைத் தூக்கி எறிவோம். மனித குலத்தை தாக்கிய மற்ற நோய்கள் போல இதையும் நாம் புரிஞ்சுகிட்டோம்னா வென்றுவிடலாம். வென்றிருக்கிறோம். அதனால் வெல்வோம். சென்னை, நம் தமிழகத்தின் மருத்துவ வசதிக்கான தலைநகரம். அதை கொரோனாவுக்கான தலைநகரமாக மாற்றிவிடக் கூடாது. இதற்கான புதிய முயற்சிதான் நாமே தீர்வு எனும் இயக்கம். இது ஒரு தனிமனித இயக்கம் அல்ல.
நாம் அனைவரும் பங்கெடுக்கும் இயக்கம். பங்கெடுக்க வேண்டிய இயக்கம். இனிவரும் சில வாரங்களுக்கு ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி பேதங்களை மறந்து ஒரு கூட்டில் இணைவோம். இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம். நாளை நமதே.” என்று தான் முன்னெடுக்கும் புதிய திட்டம் பற்றி கமல்ஹாசன் கூறியுள்ளார்
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”