உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் எனப் பெயர்பெற்ற ஜாக்கி சான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல், அவரது பிரபலம் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் பரவியது. கொரோனா வைரஸ் பரவாத இடங்களுக்குக் கூடச் சென்று அவரது ரசிகர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியது. இதைப் பற்றி விசாரித்தவர்களுக்கெல்லாம் ஒரே தகவல் தான் கிடைத்தது.
கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருந்தபோது நடைபெற்ற ஒரு போலீஸ் அதிகாரியின் ஓய்வு பெறும் விழாவில் ஜாக்கி சான் உட்பட 60 பேர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பங்குபெற்ற 49 வயதான ஒரு போலீஸ் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனால் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அப்போது ஜாக்கி சானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, தற்போது அவரை மருத்துவ பரிசோதனைக்குள் வைத்துள்ளனர் என்ற தகவல் பரவி ஜாக்கி சான் ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியது. பல நாட்களாக இந்தத் தகவல் சுற்றிக்கொண்டு வந்ததாலும், ஜாக்கி சானிடமிருந்து எந்த விளக்கமும் வராததாலும் ரசிகர்களின் சந்தேகம் அதிகரித்தது. ஆனால், தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை ஜாக்கி சான் வெளியிட்டிருக்கிறார்.
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ள ஜாக்கி சான் “என்னைப் பற்றி கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி. நான் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். தயவு செய்து கவலைப்படாதீர்கள். என்னை எங்கும் அடைத்துவைக்கவில்லை. மற்ற எல்லோரும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். எனக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலவிதமான பரிசுப் பொருட்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அதில் நிறைய மாஸ்குகளும் இருந்தது மகிழ்ச்சியான செய்தி. அவற்றையெல்லாம் என் நிறுவனத்திடம் சொல்லி தேவையானவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்” என்று அதில் கூறியிருக்கிறார்.
**-சிவா**
�,