நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘FIR’ திரைப்படம் வெளியாக குவைத் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்துள்ளது.
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘FIR’. கொரோனாவால் இந்த பட வெளியீடு தாமதமாகி இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மலேசியா, குவைத், கத்தார் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அபு பக்கர் அப்துல்லா எனும் இஸ்லாமிய இளைஞனாக நடித்துள்ளார். தீவிரவாதம், போலீஸ் தேடுதல் என நகரும் கதை இது. மேலும் இந்த படம் மலேசியா, குவைத் நாடுகளில் வெளியிட முடியாததால் நடிகர் விஷ்ணு விஷால் அங்குள்ள ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தீவிரவாதம்- போலீஸ் என்பதால் குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் படம் வெளியாக தடை ஏற்பட்டுள்ளதா என்ற குழப்பம் தற்போது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘FIR’ திரைப்படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘அந்த நாடுகளில் படத்தை தடை செய்யவில்லை. இஸ்லாம் போன்ற வார்த்தைகள் படத்தில் இடம்பெற்றிருப்பதால் அங்கு படம் சென்சார் ஆகவில்லை. இந்த காரணத்தாலேயே படம் அங்கு வெளியாகவில்லை’ என்று மனு ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
விஷ்ணு விஷாலே இந்த படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். மேலும் இந்த படம் ரிலீஸூக்கு முன்பே 22 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**