ஈரானிய திரைப்படமான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) படத்தின் அதிகாரபூர்வ மறுபதிப்பாக ‘அக்கா குருவி’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை கங்காரு, மிருகம் படங்களை இயக்கிய சாமி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார். கொரோனா காலத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் படம், ஊரடங்கால் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது மே மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் உள்ள நிலையில், மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். சென்னையில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஏப்ரல் 25 அன்று நடைபெற்றது.
இந்த வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “இளையராஜா பாஜகவில் கூட இணையலாம். ஆனால் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது தவறு. பாஜகவின் தேர்தல் பார்முலாவே தேர்தலின்போது திரைப் பிரபலங்களை சந்தித்து அவர்களை வைத்து பிரச்சாரம் செய்து வெற்றி பெறுவதுதான். திரைப் பிரபலங்கள் மூலம் பாஜகவையும், மோடியையும் விளம்பரம் செய்வதுதான் அவர்களின் யுக்தி. 2014, 2019 ஆண்டு தேர்தல்களின்போது விவசாயிகளையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் இந்தி நடிகர், நடிகைகளை மட்டும் சந்தித்து அவர்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.
அதையே தற்போது தமிழ்நாட்டிலும் முயற்சி செய்கின்றனர். இதில் இளையராஜாவை போல நம்முடைய திரைக் கலைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு அடையாளம் கொடுத்த மக்களின் பக்கம் நிற்பதுதான் திரைக் கலைஞர்களுக்கான சமூக பொறுப்பு. அதிகாரத்தின் பக்கம் துணை நிற்பதென்பது மக்களுக்கு செய்யும் துரோகம். இதை உணர்ந்து திரைக்கலைஞர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “பாஜகவுக்குத் தெரிந்தது, கலவரங்களை உருவாக்குவது, வெற்றி அடைந்தவர்களை தன் வசப்படுத்துவது, அதிகாரத்தை தனக்குள் கொண்டுவருவதுதான். கொள்கை ரீதியாக சித்தாந்த ரீதியான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். வெற்றி பெற்றவர்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வார்கள். இளையராஜா மோடியோடு அம்பேத்கரை ஒப்பீடு செய்தது மிகப் பெரிய வரலாற்று தவறு. மோடியை புகழ இளையராஜாவுக்கு 100 சதவிகிதம் உரிமை உள்ளது. பாஜகவில் கூட அவர் இணையலாம், ஆனால் அம்பேத்கரை அவரோடு ஒப்பிட்டு பேசுவது தவறு. ஆனால் அதற்காக இளையராஜாவை சாதிய ரீதியாக விமர்சனம் செய்வது அதைவிட தவறானது. அதை நாம் அனுமதிக்கக் கூடாது.
யுவன் சங்கர் ராஜாவுக்கு, சீமான் எதிர்ப்பு தெரிவிப்பது சீமானின் அரசியல் நிலைப்பாடு. திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்குமான முரண்பாட்டின் வெளிப்பாடுதான் சீமானின் விமர்சனம். திரைக் கலைஞர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர் – நடிகர் இடையே இருக்கும் உறவு. நடிகரின் வியாபாரம் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிற மொழி படங்களின் வெற்றி, பான் இந்தியா என்ற டிரெண்டை உருவாக்கியுள்ளது. இது சிறிது காலம்தான் நீடிக்கும். பான் இந்தியா என்ற சொல்லாடலே சிக்கலானது. இதை அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். ஒற்றை இந்தியா, ஒற்றை உணவு, ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்பது போல பான் இந்தியா இருப்பதாக தெரிகிறது. இது ஆபத்தானது என்று கருதுகிறேன்” என்றார்.
**-இராமானுஜம்**