தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய அமைப்புகளாகத் திகழ்ந்துவரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை இல்லாமல் இருந்து வருகிறது.
தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், தமிழக அரசின் சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொண்டுவரப்பட்டது. இந்த தனி அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தனி அதிகாரியின் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 22 அன்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அரசு நியமித்த சிறப்பு அதிகாரியின் தலைமையில் தயாரிப்பாளர் சங்கம் தற்போது நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அனைத்து விஷயங்களும் தீர்மானிக்கக் கூடிய தலைமைஅமைப்பாக இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆளும் அரசுக்கு அடிபணிந்து போகக்கூடிய அமைப்பாகவே இருந்து வந்திருக்கிறது. நடிகர் விஷால் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்னர் இதில் சற்று பின்னடைவு ஏற்பட்டதுடன், அரசாங்கத்துக்கு எதிராக சங்கத்தின் தலைவர் கருத்து சொல்வது, அரசியல் பேசுவது என்கிற நிலைப்பாட்டை கடைப்பிடித்தார். ஒரு கட்டத்தில் அம்மா டிவி தொடங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி நடிகர் விஷாலிடம் இருந்து வந்ததை அதிமுக அரசு அதிர்ச்சியுடன் பார்த்தது. அதன் பின்னர் தங்கள் விருப்பப்படி செயல்படும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் இரண்டு அமைப்புகளையும் முடக்குவதற்கான சூழலை எதிர்பார்த்து காத்திருந்தது.
சங்கங்களை நடத்துவது எப்படி என்பதில் போதிய அனுபவம் இல்லாத நடிகர் விஷால் தனது தவறான செயல்பாடுகளால் சங்கத்தை தமிழக அரசு முடக்கி தனி அதிகாரி நியமிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் தற்போது உள்ளது. எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும் சங்க நிர்வாகிகளின் கருத்து என்று அரசை சங்கடப்படுத்த கூடிய வகையில் எதுவும் தற்போது இல்லை. இந்த நிலை தொடர்வதற்கு தனக்கு வேண்டிய நபர்களை தயாரிப்பாளர் சங்க நிர்வாகப் பொறுப்புக்கு தேர்தல் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மறைமுகமாக செய்து வருகிறது. இதன் முதற்கட்டமாக பூர்வாங்க வேலைகளை செய்வதற்கு ரகசியமாக குழு ஒன்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சங்கத்தின் கவுரவ செயலாளர் பொறுப்பில் இருந்தவரும், தமிழக முதல்வரின் சமூகத்தை சார்ந்தவருமான அம்மா கிரியேஷன்ஸ் சிவா தலைவர் பொறுப்புக்கும், அரசு நியமித்துள்ள ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சத்யஜோதி தியாகராஜன் பொருளாளர் பொறுப்புக்கும், செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு வேண்டப்பட்டவரான JSK சதீஷ் குமார் கௌரவ செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும் என்று ஆளும் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இளைய மகன் ஜெய பிரதீப்பை தயாரிப்பாளர் சிங்காரவேலன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது முதல்வருடனான சந்திப்பில் சிங்காரவேலனுக்கு யாரை சந்திக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஆலோசனையின் பேரில் சேலத்தில் எடப்பாடியின் வலதுகரமாக செயல்படும் ஒருவரை சந்தித்துப் பேசியிருக்கிறார் சிங்காரவேலன்.
தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் அக்கினி சிறகுகள் படத்தின் படப்பிடிப்பு கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக அங்கிருக்கும் சிவா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சம்பந்தமான கூட்டம் ஒன்றுக்கு கஜகஸ்தான் நாட்டில் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் விருப்பத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஆகியவை விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட இருப்பதாகத் தெரிகிறது.
தமிழ் சினிமா தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தாலும் அது சம்பந்தமான சினிமா சங்கங்கள், தேர்தல் விழாக்கள் ஆடம்பரங்கள் குறைந்தபாடில்லை. 1200 உறுப்பினர்கள் உள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கடல் கடந்து நடைபெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர்களை சந்தித்து, தேர்தலை சந்திப்பதற்காக ஆகும் செலவுத்தொகையை ஈடு செய்வதற்கு சில தனி ஏற்பாடுகளை செய்து கொடுத்திருப்பதையும் கூறி ஆதரவு திரட்டப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.
**-மின்னம்பலம் டீம்.**
�,”