பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி முதல் ஆளாக வெளியேறி இருக்கிறார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24*7 என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஓடிடி வடிவம் மற்றும் பிக்பாஸ் விளையாட்டு புரிந்த போட்டியாளர்கள் என்பதால் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் முதல் வாரமே நாமினேஷன் ப்ராசஸை ஆரம்பித்து வைத்தார் பிக்பாஸ்.
இதில் அனிதா, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய் உள்ளிட்டோர் நாமினேஷனில் வந்தனர். ‘முதல் வாரம் என்பதால் நாமினேஷனில் இருந்து யாரும் வெளியேற்றபட மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நிச்சயம் ஒருவர் வெளியேற்றப்படுவார்’ என நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் கூறினார்.
அதன்படி, குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டிருக்கிறார். இவர் கடந்த மூன்றாவது சீசனில் வந்தபோதே குறைந்த நாட்களிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோதே வனிதா, பாலாவுடன் அதிகம் வாக்குவாதம் நிகழ்ந்தது. மேலும், முதல் வாரத்தில் நான் வெளியேறினாலும் பரவாயில்லை எனவும் சொல்லி இருந்தார் சுரேஷ். போட்டியிலிருந்து வெளியேறுவது அபிநய்யா அல்லது சுரேஷ் சக்ரவர்த்தியா என்ற இழுபறி கடைசி வரை போய் கொண்டிருந்த நிலையில், சுரேஷ் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
‘அபிநய்யை விட நான் வாக்குகள் குறைவாக பெற்றேனா? கண்டெண்ட் கொடுத்தவனை வெளியேற்றியது நியாயமில்லை!’ என அவர் ட்வீட் செய்ததாக ஒரு போஸ்ட் இருக்க அது நான் இல்லை, போலி ஐடி என தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற காரணமாக அவரது வயது மற்றும் அடுத்தடுத்த உடல் ரீதியிலான டாஸ்க்குகளை சமாளிக்க முடியாமல் போகலாம் என்பதும் காரணமாக சொல்லப்படுகிறது.
**ஆதிரா**