சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் டாக்டர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். இவரின் இரண்டாவது படமே டாக்டர். சிவகார்த்திகேயன், பிரியா மோகன், வினய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து ‘செல்லம்மா’ பாடல் ஏற்கெனவே வெளியாகி பெரியளவில் வைரலானது.
இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்தது. ஏனெனில், படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜனவரி 03ஆம் தேதி தான் முடிவடைந்தது. படத்தின் எடிட்டிங், டப்பிங், ஒலிக்கலவை, ஃபைனல் எடிட் உள்ளிட்ட பல வேலைகள் இருக்கிறது. அதனால், ஏப்ரல் என்றே படக்குழுவும் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், படத்தினை வருகிற மார்ச் 26-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த திடீர் மாற்றத்துக்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. என்னவென்றால், ஏப்ரல் மாதத்தை குறிவைத்து பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக இருக்கிறது. உதாரணமாக, கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன், விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்கள் வெளியாக இருக்கிறது. குறிப்பாக, ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் ‘சுல்தான்’ படமானது ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருப்பதை அறிவித்துள்ளது. சொல்லப்போனால், ஏப்ரல் 2ஆம் தேதி தான் டாக்டர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது படக்குழு. முதலாக சுல்தான் பட அறிவிப்பு கடந்த பிப்ரவரி 01ஆம் தேதி வெளியாகிவிட்டதால், டாக்டர் படத்தின் ரிலீஸ் சிக்கலாகியிருக்கிறது.
இந்தக் காரணத்தால் சுதாரித்துக் கொண்ட டாக்டர் படக்குழுவுக்கு, அவசர அவசரமாக ஒரு ரிலீஸ் தேதியை உறுதி செய்து வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான், சுல்தான் ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்பாக அதாவது மார்ச் 26ஆம் தேதி வெளியிட முடிவு செய்து, அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறது.
போட்டி போட்டு ரிலீஸ் தேதியை உறுதி செய்துவிட்டார்கள், யார் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறுகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
**- ஆதினி**�,