தென்னிந்தியத் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. தன்னுடைய வாழ்க்கையில் பலவித போராட்டங்களைக் கடந்த பின்னரே அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துடன் அவர் நடித்து வெளியான தர்பார் படத்தை, தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாகத் தலைவர் 168 படத்திலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறு தன்னை எப்போதும் ஷூட்டிங்கில் பிசியாக வைத்திருக்கும் நயன்தாரா, தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை மற்றும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பிங்க் வாக் என்ற பெயரில் பெண்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நயன்தாரா பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவியர் , பெண்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பிங்க் நிற உடை அணிந்து பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி 5 கிமீ தூரத்துக்குப் பேரணி சென்றனர். ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய பேரணி, எத்திராஜ் சாலை வழியாகச் சென்று நுங்கம்பாக்கத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவின் புகைப்படம் அவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
**கவிபிரியா**
�,”