அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருந்த கதையில் தற்போது விஷால் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஷால் ஊரடங்கிற்கு முன்பு சக்ரா, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் பிஸியாக இருந்தார். இதற்கிடையில், விஷால் தனது அடுத்த படத்திற்காக இரு முகன் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கருடன் இணைந்துள்ளதாகவும், இப்படத்தை வினோத் குமார் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் உறுதியாகியுள்ளன.
ஜெயம் ரவி நடித்த அடங்க மறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் தங்கவேல். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் அவரது அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, கார்த்தி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருந்தார் கார்த்திக் தங்கவேல். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், கார்த்தி பொன்னியின் செல்வன், சுல்தான் ஆகிய படங்களில் பிஸியாக இருந்ததால் அடங்கமறு இயக்குநரால் பணியைத் தொடங்க முடியவில்லை. இந்நிலையில், தற்போது அதே கதையில் கார்த்திக்கு பதிலாக நாயகனாக நடிக்க விஷால் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. பைவ் ஸ்டார் கதிரேசன் தான் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவுப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,