விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார். இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு சொல்லியிருந்தது. ஆனால், தற்போது ஒரு நாளுக்கு மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட முடியும் எனும் நிலை மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றால் பட வெளியீடு பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை சுப்பையா சண்முகம் பெற்றுள்ளார். இவர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு படத்தை வாங்கி வெளியிட்டவர். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை விலை பத்தரை கோடி படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணைய வெளியீட்டு உரிமை விலை பதினேழரை கோடி. ஜீ தமிழ் தொலைக்காட்சி இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம்.
அடுத்து இப்படத்தின் இந்தி உரிமை எட்டே முக்கால் கோடிக்கு விற்றிருக்கிறதாம். வெளிநாட்டு விநியோக உரிமை மற்றும் தெலுங்கு, கன்னட உரிமை ஆகியவற்றைச் சேர்த்தால் நாற்பது கோடிக்கும் மேலேயே வருகிறது. விஷால் நாயகனாக நடித்திருக்கும் படங்களில் அதிக விலைக்கு விற்பனையான முதல் படம் வீரமே வாகை சூடும் படமாக இருக்கும் என்று கூறுகின்றனர் சினிமா வட்டாரங்கள்.
**அம்பலவாணன்**
�,