தமிழ் சினிமாவில் பாரம்பரியமிக்க, அதிகாரமிக்க அமைப்பாக இருப்பது சென்னை-காஞ்சிபுரம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம். தமிழ் சினிமாவில் திரைப்பட விநியோகம், திரையிடல் என இரண்டிலும் இந்த சங்கம் எடுக்கும் முடிவுகள்
தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் தலைவர் பொறுப்பினை வகித்து வந்த அருள்பதி உறுப்பினர்கள் நலன் காப்பதற்கு பதிலாக தன்னை மட்டும் அதிகாரத்தை பயன்படுத்தி வளப்படுத்திக் கொண்டதாக உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவிவந்தது. எதிர்த்து கேள்வி கேட்பவர்களை சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி
வைப்பது அல்லது நிரந்தரமாக நீக்கம் செய்வது என்கிற எதேச்சதிகார மனப்பான்மையுடன் அருள்பதி செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இவரது நடவடிக்கையிலிருந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, இந்த சங்கத்தைத் தொடங்கி 16 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்துவந்த சிந்தாமணி முருகேசன் போன்றவர்கள் கூட தப்பவில்லை. தமிழ்சினிமாவில் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் இந்த மூன்று பிரிவுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு புதிய படங்களை யார் வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள்களுக்கு சாதகமாக அருள்பதி செயல்பட்டு வந்ததாகவும் அதற்கு தலைவர் பதவியை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது.
அருள்பதி தலைமையிலான நிர்வாகக் குழுவை தோற்கடிப்பதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் முயற்சித்து தோல்வியைத் தழுவி வந்த எதிர்த்தரப்பு இந்த முறை இயக்குநரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தலைமையில் ஜனநாயகம் காப்போம் என அணி அமைத்து போட்டியிட்டனர். 537 வாக்குகள் மட்டுமே உள்ள இந்த சங்கத்தின் தேர்தல் ரிசல்ட்டை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைக் காட்டிலும் முக்கியத்துவமிக்க தேர்தலாக தமிழ் சினிமா உலகம் எதிர்நோக்கியது.
22.12.2019 காலை இந்த சங்கத்தின் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை எட்டு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 537 வாக்குகளில் 465 வாக்குகள் பதிவானது. ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் எதிர்நோக்கிய இந்த தேர்தலில் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக பெறுவதற்கு அரசியல் கட்சிகள் அதிர்ந்து போகிற வகையில் செயல்பட்டனர். ஒரு வாக்களருக்கு எட்டு கிராம் தங்ககாசு பத்தாயிரம் பணம் அருள்பதி தரப்பில் கொடுத்து சத்தியம் வாங்கப்பட்டது என்றும், டி.ராஜேந்தர் அணி தரப்பில் நான்கு கிராம் தங்ககாசு ஐந்தாயிரம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு தரப்பின் மீது மற்றொருவர் குற்றம் சுமத்துகின்றனர்.
பணம் தங்கக்காசுகள் கொடுக்கப்பட்டாலும் தலைமை மாற வேண்டும் என்பதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தெளிவாக இருந்து வாக்களித்திருப்பது தேர்தல் முடிவுகளின் மூலம் வெளிப்பட்டது. தலைமை மீதிருந்த எதிர்ப்பு அலை, தவறு செய்ய மாட்டார் என்று டி.ராஜேந்தர் மீது இருக்கும் அபிப்பிராயம் அவரது அணியை வெற்றி பெற வைத்திருக்கிறது.
வாக்கு பதிவுக்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற பொறுப்புகளில் வெற்றி பெற்றவர்களும், அவர்கள் பெற்ற வாக்கின் விபரமும்.
செயலாளர்: மன்னன் – 239
பொருளாளர்: பாபுராவ் – 258
துணை செயலாளர்: காளியப்பன் – 226
துணை தலைவர்: பங்களா சீனு – 233.
-இராமானுஜம்.�,