வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ‘வாடிவாசல்’ எனும் படத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் சூர்யாவின் பிறந்த தினத்தன்று வெளியானது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி, பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், படம் இன்னும் துவங்கவில்லை.
சூரரைப் போற்று படத்தை முடித்த சூர்யா, தற்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கும் என்று சொல்லப்படுகிறது. கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை மாதிரியான ஒரு பேமிலி டிராமாவாக உருவாகிறது.
பாண்டிராஜ் படத்தை முடித்த கையோடு, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் படத்தை சூர்யா தயாரித்துவருகிறார். இந்தப் படத்தில் முக்கிய ரோலில் சூர்யா நடிக்க இருப்பதால், இதன் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்துகொள்கிறார். அதன்பிறகு, அஜித்துக்கு வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.
அதுமாதிரி, வெற்றிமாறனும் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடிக்க சத்தியமங்கலம் காடுகளில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதைமுடித்துவிட்டு, ஜெயமோகனின் ‘அழைப்பு’ எனும் கதையின் உரிமையை வாங்கி, ஐபோனிலேயே படமாக்க இருப்பதாகவும் தகவல்.
பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர்ணன்’ பட தயாரிப்பில் இருந்த கலைப்புலி எஸ்.தாணு, அடுத்தக் கட்டமாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ பட தயாரிப்பில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.
இப்படி சூர்யாவும், வெற்றிமாறனும், தயாரிப்பாளர் தாணுவும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், வாடிவாசல் துவங்குமா என பெரிய சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், படத்தின் போஸ்டர் வந்ததோடு சரி, அதன்பிறகு வாடிவாசல் படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லை. படத்தை துவங்குவதற்குள் இயக்குநரும், நடிகரும் வேறு வேறு படங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்கள். ஆக, படம் துவங்குவதில் விருப்பமில்லையா, அல்லது இயக்குநருக்கும், நடிகருக்கும் ஒத்துப் போகவில்லையா , இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்கிற பல சந்தேகங்கள் எழுகிறது.
**ஆதினி**�,