கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ திரைப்படம் வெளியானது.
இரும்புத்திரை திரைப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு முதன்மையான கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் கதை குறித்து சர்ச்சை எழுந்தது. அதற்கு விளக்கம் தரும் விதமாகப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘ஹீரோ படத்தின் கதை தொடர்பாக எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 25 நபர்கள் முன்னிலையில் விளக்கம் அளித்திருந்தேன். இருப்பினும் எனக்கு முன்னால் புகார் அளித்திருந்த நபர் அவரது கதையைப் பதிவு செய்திருந்ததால் அவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. என் கதையின் கருவைப் பத்திரிகை செய்தியில் இருந்து தான் உருவாக்கினேன். கதை உருவான சிறு சிறு வளர்ச்சிக் கட்டங்களுக்குமான பதிவுகள், ஆவணங்கள், ஆடியோ ஃபைல் வைத்திருக்கிறேன். என் கதையையும் பதிவு செய்து வைத்துள்ளேன். ஒத்த சிந்தனையை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள். கதையைப் பதிவு செய்து வைப்பது, அது திருடு போய்விடாமல் இருக்கத்தானே தவிர ஒரே போன்று சிந்தித்துவிடக் கூடாது என்பதற்காக அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘பதிவு செய்யப்பட்டுள்ள எங்கள் இருவரின் கதையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தாங்கள் மறுப்பது எதனால்? எனது படைப்பைச் செம்மைப்படுத்த மூன்று திரை எழுத்தாளர்களை நியமித்து பொன்.பார்த்திபன், சவரிமுத்து, அந்தோனி பாக்கியராஜ் ஆகிய அவர்கள் மூவரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல சம்பளத்தையும் பெற்றுத் தந்திருக்கிறேன். நான் எழுத்தாளர்களை மதிப்பவன் என்ற போதிலும் என் கதைக்குத் துளியும் சம்பந்தப்படாத ஒருத்தருக்கு நான் ஏன் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்?’ என்று அவர் கேட்டுள்ளார்.
மேலும், தனது கதையையும், புகார் கொடுத்த நபரின் கதையையும் தங்கள் இருவர் முன்னிலையில் ஒப்பிட்டுப்பார்த்து, இருவரது கதையும் ஒன்றாக இருக்கிறதா என ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.�,”