�இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி முதல் பாகம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. பிரபாஸின் ரசிகர்கள் இந்த நாளை இன்னும் சிறப்பாக கொண்டாட அவரது ‘பிரபாஸ் 20’ படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை பிரபாஸ் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளக்கணக்கில் இன்று(ஜூலை 10) வெளியிட்டார். இப்போது வரை #பிரபாஸ் 20 என்று அழைக்கப்படும் இந்த ‘லவ்-டிராமா’விற்கு **ராதே ஷியாம்** என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாயகன் பிரபாஸும், நாயகி பூஜா ஹெக்டே ஆகியோரும் நடனமாடியபடி இருக்க, வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போஸ்டர். பழைய கட்டிடங்களைக் கொண்ட நகரத்தை சூழும் பெரு வெள்ளத்திற்கு நடுவில், காதலர்கள் தங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் தருணத்தை கொண்ட இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் டி சீரிஸால் தயாரிக்கப்படும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. 1920களில், பாரிஸின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராதே கிருஷ்ண குமார் இப்படத்தை இயக்குகிறார். பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, சச்சின் கெடேகர், முர்லி சர்மா, சாஷா செட்ரி, குணால் ராய் கபூர் மற்றும் சத்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா, ஈரம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,