pரஜினியுடன் லோகேஷ்: விட்டுக்கொடுத்த விஜய்

Published On:

| By Balaji

லோகேஷ் கனகராஜை நடுவில் நிற்க வைத்து, ரஜினி-கமல்-விஜய் ஆகிய மூவரும் ஒரு சினிமா பிளான் தயார் செய்துவருகின்றனர். கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்றால் அதற்கு லோகேஷ் தேவை. மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, அதேபோன்றதொரு மினிமம் பட்ஜெட்டில் மாஸ்டர் ஹிட் படம் வேண்டுமென்றால் அதற்கும் லோகேஷ் தேவை. இப்படி லோகேஷைச் சுற்றியே தமிழ் சினிமாவின் அடுத்த 500 கோடி பட்ஜெட் வட்டமிடுகிறது என்றால் யார் தான் அவரை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்கள்.

[யாருக்கு யார்: சதுரங்கத்தில் நிற்கும் நால்வர்!](https://minnambalam.com/entertainment/2020/02/29/34/rajini-kamal-vijay-lokesh-battling-for-next-movie) என்ற செய்தியில், லோகேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தை உருவாக்க ரஜினி-கமல்-விஜய் ஆகிய மூவரும் எப்படி தயாராகிவருகின்றனர் என்ற தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். அதன்படியே அத்தனை சம்பவங்களும் நடைபெற்றாலும், கொரோனா பாதிப்பு இந்தப் படங்களின் வேகத்தைத் தட்டுப்படுத்துவதைவிட அதிகமாக்கியிருக்கிறது.

ரஜினியின் திரையுலகப் பயணம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எப்படியிருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே அவரை வைத்து படம் எடுத்துவிடவேண்டும் என்பது கமலின் கணக்கு. கைதி படத்தினால் பூரித்துப்போன கமல்ஹாசன், லோகேஷை அழைத்து ஒரு படத்துக்கான கதையைக் கேட்டார். கதை முழுவதையும் சொல்லி முடித்த லோகேஷ்,  ‘இந்தக் கதை உங்களைவிட ரஜினி சாருக்கு ரொம்ப சூட் ஆகும்’ என்று தைரியமாக சொல்ல, ‘அப்ப அவரை வைத்தே எடுத்துவிடுவோம்’ என்று ரஜினியிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டார் கமல். ஆனால், மாஸ்டர் படம் முடிந்ததும் ரஜினியுடன் இணையும் படத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தாமல் தள்ளிப்போட்டிருந்தார் லோகேஷ் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். காரணம், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு யோசனைக்கான கால அவகாசம் கிடைத்ததால், அடுத்ததாக ரஜினி-லோகேஷ் இணையும் படத்தினை முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டார் கமல். அதன்படி, ரஜினியின் கால்ஷீட், ஷூட்டிங்குக்கான பட்ஜெட் என அனைத்தும் தயாராகிக்கொண்டிருக்க லோகேஷ் முழுக் கதையை எழுதிமுடிக்க வேண்டிய வேலை மட்டும் மீதமிருக்கிறது என சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், மாஸ்டருக்கு அடுத்து விஜய்யுடன் இணைவதா என்ற கேள்வியை புறந்தள்ளிவிட்டு முதலில் கதையை முடிக்க உட்கார்ந்துவிட்டார் லோகேஷ் எனக் கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

விஜய் தரப்பு இந்த மாற்றத்தை எப்படி எடுத்துக்கொள்ளும் என்று விசாரித்தபோது, விஜய் அனைத்துக்கும் தயாராக இருக்கிறார் என்கின்றனர் அவருடைய பட வேலைகளைக் கவனிப்பவர்கள். சுதா கொங்கராவிடம் கேட்டிருந்த ஒன்லைன் கதையை முழுவதுமாக வாங்கிப் படித்துவிட்டாராம் விஜய். ஷூட்டிங் எப்படி, மொத்த ஷூட்டிங் ஷெட்யூல் ஆகியவை குறித்து விசாரித்தபோது மட்டும் விஜய்க்கு சிறு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதுவரை விஜய் நடித்திராத அளவுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ்-கேங்ஸ்டர் திரைப்படத்தை சுதா கொங்கரா தயாரித்து வைத்திருக்கிறார். பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட அந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் தேவைப்படுகிறது என்று சுதா கூறியிருக்கிறார். இதன் பின்னரே, லோகேஷின் அடுத்த ஷெட்யூல் என்னவென்பது குறித்து தெரிந்த பிறகு முடிவெடுக்கலாம் என காத்திருக்கிறார் விஜய். ரஜினி-கமல்-லோகேஷ் இணையும் திரைப்படத்தின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் பட்சத்தில், விஜய் தாராளமாக சுதா கொங்கராவின் திரைப்படத்தில் இணையத் தயாராகிவிடுவார்.

காரணம், ரஜினியை இயக்கும் வாய்ப்பினை விஜய் படத்துக்காக லோகேஷ் இழந்தார் என்ற பேச்சு வந்துவிடக்கூடாது என விஜய் தரப்பில் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, லோகேஷ் இயக்கத்தில் விஜய்யின் மாஸ்டரைப் பார்த்த பிறகு, ரஜினியின் மாஸ் எண்ட்ரியை ரசிகர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு தான் அதிகம்.

**-புகழ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share