மரண மாஸ் மாஸ்டர் ட்ரெய்லர்: அர்ஜுன் தாஸ் புகழாரம்!

Published On:

| By Balaji

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து, அந்தப்படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் சில தகவல்களைத் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியே இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரொனா பரவல் காரணமாக படத்தில் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

‘மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்?’என்று படக்குழுவினரிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசும் போது மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் குறித்த கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதிலளித்தார்.

அவர் பேசும் போது, **“மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை ஆறு முறை பார்த்து விட்டேன். ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கிறது. ட்ரெய்லர் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டது. விரைவில் வெளியிடப்படும். ஆனால் ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். சரியான நேரம் வரும்போது தயாரிப்பாளர் ட்ரெய்லரை வெளியிடுவார்.**

**ஆனால் எப்போது ட்ரெய்லர் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அதில் ஒரு காட்சி இருக்கிறது. விஜய் சார் கூறும் ஒரு வசனம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். எனவே ட்ரெய்லர் வெளியாகும்வரை காத்திருப்போம்.”** என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ‘மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகுமா? அல்லது OTTதளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுமா?’ என்ற கேள்விக்கு, “அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகளை நாம் திரையரங்கில் பார்க்கப் போகிறோம். திரையரங்கில் வெளி வந்ததற்கு பின்னர் தான் OTT-யில் வெளியாகும். ரசிகர்களுடன் திரைப்படம் பார்க்கும் அனுபவமே சிறப்பானது. என்னைக் கேட்டால் திரையரங்கில் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். அங்கு ரசிகர்களின் கொண்டாட்டத்தை நேரடியாகப் பார்க்க வேண்டும்’என்று கூறினார்.

இந்தத் தகவல் விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளமாஸ்டர் திரைப்படத்தில், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share