கொரோனா வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை ஆனால் அலட்சியம் தான் கூடாது என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்து பதிவாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாகவும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியும் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வுப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விவேக், “தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது. இருந்தாலும், கொரோனா தொற்றுக்கு மக்கள் போதிய முன்னுரிமை அளிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கிறார்களோ என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை. அதே நேரத்தில் அலட்சியம் கூடாது.
நிறையப் பேர் மாஸ்க் என்ற பெயரில் ஏதோ ஒன்றைப் போட்டிருப்பதைப் பார்க்கிறேன். அது மூக்கையும், வாயையும் மூடுவதில்லை. பலரும் மாஸ்க்கை கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர். சில பேர் மாஸ்க்கை ஒற்றைக் காதில் ஸ்டைலாகத் தொங்கவிட்டுள்ளனர். இப்படியா மாஸ்க் போடுவது?
இந்த ஊரடங்கு நேரத்தில் நாம் சாப்பிட்ட பிறகு அந்தத் தட்டை மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுடன் சேர்த்துக் கழுவுவது வீட்டுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று தெரிந்துகொண்டேன். அதேபோன்று நம்முடைய கார், பைக், சைக்கிள் உள்ளிட்டவற்றை நாமே கழுவுவது எவ்வளவு கஷ்டம் என்பதைத் புரிந்துகொண்டேன். சினிமா சாராத நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு தொடர்ச்சியாகப் பேசி வருகிறேன். சமூக வலைதளங்களில் என்னைப் பின் தொடர்பவர்களுடன் நான் தினமும் பேசி வருகிறேன்.
கொரோனாவை விட மோசமானது என்னவென்றால் நமக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற பயம்தான். நமக்கு ஒன்றும் வராது. நாம் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்க வேண்டும். பயம் தான் மரணம்” என்று தெரிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,