கொரோனா பாதிப்பின் காரணமாக கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடு தேடி வந்து குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் இதுவரை 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதனால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் கேரள அரசு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் மார்ச் 31 வரை கேரளாவில் உள்ள அங்கன்வாடிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ள சூழலிலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் கேரளாவில் வெற்றிகரமாக செயல்முறை படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரளாவின் சுகாதாரம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஷைலஜா விளக்கம் அளித்ததோடு தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “மாநிலத்தில் கோவிட்-19 தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தாய் சேய் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தால் மாநிலத்தில் இயங்கிவரும் 33,115 அங்கன்வாடிகளில் படிக்கும் 3.75 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
அத்துடன் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இளம்பெண்களும் பயன்பெற்று வருகின்றனர். முன்னதாகவே மூன்று வயதுக்குக் கீழ் உள்ள 4.75 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருட்கள் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தாய் சேய் நலப்பிரிவின் அனைத்து அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கேரளாவில் மொத்தமாக 13.5 லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் விடுமுறையில் வீட்டில் இருந்தாலும் அவர்களது வளர்ச்சிக்காக நாங்கள் தேவையான அனைத்தையும் செய்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். கேரள அரசின் இந்தத்திட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,