~ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது: வசந்த பாலன்

Published On:

| By Balaji

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், வசந்த பாலன் இயக்கத்தில் உருவான ஜெயில் படம் தடைகளைக் கடந்து வெளியாகவுள்ளதாக இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ், ராதிகா சரத்குமார், அபர்ணநதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜெயில். வசந்த பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. படைப்பு நேர்த்திக்காக தனது ஒவ்வொரு படத்திற்கும் இடைவெளி விட்டு, பொறுமையாக படம் அளித்து வரும் வசந்த பாலன், காவியத்தலைவன் படத்திற்கு பின் இயக்கும் படம் இது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இயல்பாகவே அமைந்தது.

ஸ்ரீதரன் தயாரித்துள்ள இப்படம் முடிவடைந்தும், பல மாதங்களாகவே இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இந்நிலையில், இறுதியாக வேல்ஸ் நிறுவனம் ஜெயில் படத்தை பார்த்துவிட்டதாகவும், ஊரடங்கு முடிந்தவுடன் படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வசந்த பாலன் மீண்டும் நம்பிக்கை கிடைத்துள்ளதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜெயில்’ என்று பெயர் சூட்டியதால் என்னவோ ஜெயில் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுத் திசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம்.இ தற்கிடையில் கொரோனா வேறு உலகை தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக் கீற்று தெரிகிறது. ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது. விரைவில் ஜெயிலைப் பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாக பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளைத் திறக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

**முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share