சிறு இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் நடித்து வெளியாகும் திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மான், ரிது வர்மா ஜோடியாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் கௌதம் மேனன் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கௌதம் மேனன் முதல் முறையாக நடித்திருப்பதால், அவருடன் நடித்த அனுபவம் குறித்து துல்கரும் , துல்கரின் திறமை குறித்து கௌதம் மேனனும் இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கின்றனர். துல்கர் பேசும்போது, விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தினார்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் பேசியபோது “ஒரு நடிகராக புதிய பயணம் தொடங்கியிருக்கிறது. இது எதுவுமே திட்டமிட்டது இல்லை. ஆனால் நன்றாகவே இருக்கிறது. தேசிங்கு என்னை அணுகிய விதம் எனக்கு பிடித்திருந்தது. எஸ் ஜே சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டர் இது. துல்கரை எனக்கு தெரியும். அவர் தேர்ந்தெடுத்தால் கதை நன்றாக இருக்குமென்றும் தெரியும். துல்கருடன் பணிபுரிந்தது சந்தோஷம். ரிது வர்மா, நிரஞ்சனி என்னிடம் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களுடன் இந்தபடத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இளைஞர்கள் புத்துணர்வுடன் வேலை செய்துள்ளார்கள். நான் நடித்த பகுதிகள் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
கௌதம் மேனனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் பேசியபோது “ இந்தப்படத்தின் விளம்பரத்தை ஆரம்பித்தபோது எல்லோரும் என்னிடம் ‘ஏன் இந்த இடைவெளி’ எனக் கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. என்னை மறக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தக் கதையைக் கேட்டவுடனே மிக உற்சாகமாக இருந்தது. எப்போது இந்தப்படம் செய்யலாம் எனக் காத்திருந்தேன். நான் முதலில் படக்குழு புதிது எப்படி இருக்கும் என பயந்திருந்தேன். என் மீது எல்லோரும் அன்பாக இருந்தார்கள். கௌதம் சார் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். அவர் இல்லாவிட்டால் இந்தப்படம் காமெடியாக இருந்திருக்கும். இந்தப்படத்தின் சூப்பர்ஸ்டார் அவர் தான். அவர் விசிறியாக படப்பிடிப்பில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அவருடன் கண்டிப்பாக ஒரு காதல் படம் நடிப்பேன்” என்று கூறினார்.
**-சிவா**�,